ஆன்மிகம்
சிவகாமசுந்தரி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்ததையும், பக்தர்கள் தரிசனம் செய்ததையும் படத்தில் காணலாம்

சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசன விழா

Published On 2020-01-11 03:40 GMT   |   Update On 2020-01-11 03:40 GMT
கடலூர் மாவட்டத்தில் உள்ள சிவன்கோவில்களில் நடராஜருக்கு ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழாவையொட்டி நேற்று காலை 5 மணிக்கு நடராஜர், சிவகாம சுந்தரி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. காலை 8 மணிக்கு அபிஷேக ஆராதனையும், தொடர்ந்து பாடலீஸ்வரர், பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு பூஜை, வழிபாடு நடைபெற்றது. மதியம் 12 மணி அளவில் நடராஜருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடந்தது.

மதியம் 1 மணி அளவில் ஆருத்ரா தரிசன விழா நடந்தது. இதில் நடராஜரும், அம்பாளும் ஆனந்த நடனம் புரிந்தனர். அதன்பிறகு கோபுர தரிசனம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து நடராஜரும், சிவகாமசுந்தரி அம்பாளும் வெள்ளி விமானத்தில் எழுந்தருளி, ராஜ வீதிகளில் வலம் வந்தனர். இதையடுத்து சிவகர தீர்த்தகுளத்தில் சாமிகளுக்கு தீர்த்தவாரி நடந்தது. தொடர்ந்து ஆலய மண்டபத்தில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல் காட்டுமன்னார்கோவில் அடுத்த உடையார்குடியில் பிரசித்தி பெற்ற அனந்தீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் ஆருத்ரா தரிசன விழா நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான விழாவையொட்டி திருவாரூரில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டுள்ள இக்கோவிலுக்கு சொந்தமான ஐம்பொன் சிலைகளான நடராஜர், சிவகாம சுந்தரி அம்பாள், மாணிக்கவாசகர் ஆகிய சாமி சிலைகள் பாதுகாப்பாக எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து, ஆருத்ரா தரிசனம் வெகு விமரிசையாக நடந்தது. அதையொட்டி நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள், மாணிக்கவாசகர் சாமிகளுக்கு மகா அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடந்தது. மேலும் திருவிடைமருதூர் நடராஜன் குழுவினரால் திருமுறை இன்னிசை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கலைமகள் பள்ளி நிர்வாகத்தினர் சிறப்பாக செய்தனர்

விருத்தாசலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. இதையொட்டி நேற்று காலை நடராஜருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. பால், தயிர், இளநீர், தேன் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களால் அபிஷேக ஆராதனைகள் நடந்தது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த நடராஜர் வீதியுலா வாக வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் உள்ள சிவன் கோவில்களிலும் நடராஜருக்கு ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News