செய்திகள்
மரியா கொலிஸ்னிகோவா

பெலாரஸ்: கடத்தப்பட்ட போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளரை நாட்டை விட்டு வெளியேற்ற முயற்சி - பாஸ்போர்ட்டை கிழித்து வீசியதால் பரபரப்பு

Published On 2020-09-08 19:35 GMT   |   Update On 2020-09-08 19:35 GMT
பெலாரஸ் அதிபருக்கு எதிராக நடைபெற்றுவரும் போராட்டங்களின் ஒருங்கிணைப்பாளர் கடத்தப்பட்டு நாட்டை விட்டு வெளியேற்ற முயற்சி நடைபெற்றுள்ளதாகவும், ஆனால் அவர் தனது பாஸ்போர்ட்டை கிழித்து வீசி தனது நாட்டைவிட்டு வெளியேற மறுத்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மின்ஸ்க்:

பெலாரஸ் நாட்டின் அதிபராக அலெக்சாண்டர் லூகாஷென்கோ கடந்த 26 ஆண்டுகளாக பதவி வகித்து வருகிறார். கடந்த மாதம் நடைபெற்ற தேர்தலிலும் அலெக்சாண்டரே வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதனால் எதிர்க்கட்சி சார்பில் நாடு முழுவதும் கடந்த 1 மாதமாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், அதிபர் அலெக்சாண்டர் தனது பதவியில் இருந்து விலகி அதிகாரத்தை எதிர்க்கட்சியிடம் ஒப்படைப்பது தொடர்பாக ஒருங்கிணைப்பு குழு ஒன்று எதிர்கட்சி சார்பில் அமைக்கப்பட்டது. 

இந்த ஒருங்கிணைப்பு குழுவில் பிரதான எதிர்கட்சி தலைவரான 
ஸ்வியாட்லானா சிகானெஸ்கயா மற்றும் அவரது ஆதரவாளர்கள் வெரோனிகா டிசிப்கலோ மற்றும் மரியா கொலிஸ்னிகோவா என மூன்று பெண்கள் முக்கிய நபர்களாக இடம்பெற்றிருந்தனர்.

ஆனால், தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட சில நாட்களிலேயே எதிர்கட்சி தலைவரான ஸ்வியாட்லானா சிகானெஸ்கயா கைது நடவடிக்கைக்கு அஞ்சி அண்டைநாடான லிதுவேனியாவுக்கு தப்பிச்சென்றுவிட்டார்.

அதேபோல் மற்றொரு ஒருங்கிணைப்பாளரான வெரோனிகா டிசிப்கலோவும் தனது குடும்பத்துடன் போலாந்து தப்பிச்சென்றுவிட்டார். ஆனால் மரியா கொலிஸ்னிகோவா மட்டும் பெலாரஸ் நாட்டிலேயே இருந்து கொண்டு போராட்டங்களை முன்னெடுத்து நடத்தி வந்தார்.

இதற்கிடையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போராட்டங்களில் நாடு முழுவதும் சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்றதாக தகவல் வெளியானது. இந்த போராட்டம் நடைபெற்ற சில மணிநேரங்களில் மரியா கொலிஸ்னிகோவாவை அவரது  ஆதரவாளர்கள் 2 பேருடன் சேர்த்து முகமூடி அணிந்த மர்ம நபர்கள் காரில் கடத்தி சென்றனர்.

இந்நிலையில், கடத்தப்பட்டவர்களில் மரியாவின் ஆதரவாளர்கள் நேற்று உக்ரைன் நாட்டிற்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. நாடுகடத்தப்பட்டதாக கூறப்படும் இருவரும் நேற்று உக்ரைன் தலைநகர் கிவ்வில் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

மரியா கொலிஸ்னிகோவாவுடன் சேர்த்து எங்கள் 2 பேரையும் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் காரில் கடத்தி சென்றனர். மேலும், அவர்கள் நாங்கள் குடியிருந்த பகுதிக்கு சென்று எங்கள் பார்ஸ்போர்ட்டை கைப்பற்றிக்கொண்டனர்.

பின்னர் பெலாரஸ்-உக்ரைன் நாடுகளின் எல்லைப்பகுதிக்கு எங்களை கொண்டுவந்தனர். எல்லை வழியாக எங்கள் 2 பேரையும் உக்ரைனுக்கு நாடுகடத்தி விட்டனர். அதேபோல் மரியாவையும் அவர்கள் நாடுகடத்த முற்பட்டனர். 

ஆனால், அவர் தனது பாஸ்போர்ட்டை கிழித்து வீசிவிட்டு பெலாரசை விட்டு தான் எங்கும் செல்லமாட்டேன் என கூறினார். மேலும், எல்லையில் இருந்து அவர் மீண்டும் பெலாரஸ் நோக்கி நடந்து சென்றார். 

இதனால் மரியாவை அந்த மர்மநபர்கள் மீண்டும் காரில் ஏற்றிக்கொண்டு எல்லைப்பகுதியை விட்டு வெறு இடத்திற்கு கொண்டு சென்றுவிட்டனர்.

என்றனர்.

ஆனால், மரியா கொலிஸ்னிகோவா தனது ஆதரவாளர்களுடன் உக்ரைன் தப்பிச்செல்ல முயன்றதாக பெலாரஸ் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வெளிநாடு தப்பிச்செல்ல முயன்றபோது மரியாவை எல்லை பாதுகாப்புப்படையினர் கைது செய்துள்ளதாக பெலாரஸ் அரசு தெரிவித்துள்ளது.

மரியாவின் கைது நடவடிக்கை போன்ற சம்பவங்களால் பெலாரஸ் நாட்டில் மேலும் போராட்டங்கள் நடைபெறலாம் என தகவல் வெளியாகியுள்ளது.  

Tags:    

Similar News