செய்திகள்
சீமான்

கொங்கு மண்டலத்தை சேர்ந்த 28 தொகுதி வேட்பாளர்களை அறிமுகம் செய்த சீமான்

Published On 2021-01-27 11:27 GMT   |   Update On 2021-01-27 14:26 GMT
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை தாங்கி கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்டத்தில் உள்ள 28 சட்டமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார்.

பீளமேடு:

கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கான நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் கோவை சின்னியம்பாளையம் பிருந்தாவன் ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை தாங்கி கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்டத்தில் உள்ள 28 சட்டமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார். இந்த கூட்டத்தில் 50 சதவீத பெண் வேட்பாளர்களுக்கும் வாய்ப்பு தரப்பட்டுள்ளது.

நாங்கள் வேலை கையில் எடுத்தபோது அனைவரும் கேலி, கிண்டல் செய்தனர். ஆனால் இப்போது வாக்கு வேண்டும் என்பதற்காக அனைத்து கட்சியினருமே வேல்-ஐ தங்களது கையில் எடுத்து அதனை முன்னெடுத்து வருகிறார்கள். ராகுல் காந்தியின் தமிழக வருகையை நான் வெறும் வருகையாக தான் பார்க்கிறேன். அவர் தமிழகத்திற்கு வந்து சென்றது தற்போது தங்கள் வசம் இருக்கும் தொகுதியை தக்க வைக்கதான். இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு முதற்முதற் காரணமே காங்கிரஸ் கட்சி தான்.

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தப்படுவது கொடுங்கோல் ஆட்சியையே காட்டுகிறது. தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் 100 நாளில் மக்கள் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதாக ஸ்டாலின் கூறுகிறார். ஆனால் அது சாத்தியமில்லா ஒன்று. முதலில் அவர்கள் ஆட்சிக்கு வருவது தான் மக்களுக்கு பிரச்சினை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

நான் ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு தமிழக மீனவனையும் இலங்கை கடற்படையினரால் உயிரிழக்க விடமாட்டேன். அப்படி ஒரு மீனவர் உயிரிழந்தால் நான் எனது பதவியை விட்டே விலகி விடுவேன். ராஜீவ் கொலை வழக்கில் 7 பேரின் விடுதலை என்பது ஆளுநரின் ஒற்றைகையெழுத்தில் தான் உள்ளது. ஆனால் அந்த கையெழுத்தை உடனே போட்டு அவர்களை விடுவிக்க ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெண்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும் என்பதை கடைபிடிக்கும் கட்சி எங்கள் கட்சிதான். தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு அளித்துள்ளோம். எங்கள் உடன் பிறந்தவர்களை நாங்கள் முன்னெடுக்கவில்லை என்றால் யார் முன்னெடுப்பார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News