செய்திகள்
நூற்பாலையில் பஞ்சுகள் தீப்பிடித்து எரிவதையும் அதனை தீயணைப்பு வீரர்கள் அணைப்பதையும் படத்தில் காணலாம்.

நூற்பாலையில் தீ விபத்து-பல லட்சம் பஞ்சுகள் எரிந்து சேதம்

Published On 2021-07-18 10:21 GMT   |   Update On 2021-07-18 10:21 GMT
ஆலையில் வடமாநிலம் மற்றும் தென் மாவட்டங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கியிருந்து வேலை செய்து வருகின்றனர்.
பல்லடம்:

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கேத்தனூரில் பல்லடம் ராயர்பாளையத்தை சேர்ந்த முருகேசன் ( வயது 56) என்பவருக்கு  சொந்தமான நூற்பாலை இயங்கி வருகிறது. இதில் வடமாநிலம் மற்றும் தென்மாவட்டங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கியிருந்து வேலை செய்து வருகின்றனர். 

இந்நிலையில் அந்த நூற்பாலையில் உள்ள குடோனில் விற்பனைக்காக இரண்டாம் தர கழிவு பஞ்சு மூட்டைகள் சேகரித்து வைக்கப்பட்டிருந்தன. அங்கு நள்ளிரவு தொழிலாளர்கள் சிலர் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து தொழிலாளர்கள்  நூற்பாலையில் உள்ள தீயணைப்பு சாதனம் மூலம் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் அதற்குள் தீ மளமள வென பஞ்சு மூட்டைகளில் பரவியது.

உடனே தீ விபத்து குறித்து பல்லடம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீ பரவாமல் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

மேலும் பொக்லைன் எந்திரங்கள் வரவழைக்கப்பட்டு அங்கிருந்த கழிவுப்பஞ்சு மூட்டைகள் அகற்றப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இருப்பினும் இந்த விபத்தில் பல லட்சம் மதிப்பிலான கழிவுப்பஞ்சு மூட்டைகள் தீயில் எரிந்து சேதம் அடைந்ததாக கூறப் படுகிறது.

இச்சம்பவம் குறித்து காமநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த விபத்திற்கு மின்கசிவு காரணமா ? அல்லது எந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமா? என்பது குறித்து பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News