ஆன்மிகம்
பீரேஸ்வரர் கோவில் திருவிழாவில் பக்தர்கள் ஒருவர் மீது ஒருவர் சாணி வீசியதை படத்தில் காணலாம்.

ஒருவர் மீது ஒருவர் சாணியடிக்கும் வினோத திருவிழா

Published On 2019-10-31 04:52 GMT   |   Update On 2019-10-31 04:52 GMT
தாளவாடி அருகே தமிழக-கர்நாடக மாநில பக்தர்கள் இணைந்து ஒருவர் மீது ஒருவர் சாணியடிக்கும் வினோத திருவிழாவை கொண்டாடினார்கள்.
ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே கும்டாபுரம் கிராமத்தில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த பீரேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தீபாவளி பண்டிகையை அடுத்து வரும் 3-வது நாளில் சாணியடி திருவிழா என்ற வினோத நிகழ்ச்சி கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம்.

அதேபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று காலை சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது. முன்னதாக கிராமத்தில் உள்ள அனைத்து பசுமாட்டு சாணங்கள் சேகரிக்கப்பட்டு கோவிலின் பின்புறம் குவித்து வைக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து, கழுதை மேல் சாமி உற்சவர் சிலையை வைத்து ஊர் குளத்தில் இருந்து ஊர்வலமாக கோவிலுக்கு அழைத்து வந்தனர். அங்கு பீரேஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. ஆண்கள் சட்டை அணியாமல் கோவிலுக்குள் சென்று சிறப்பு பூஜைகள் செய்தனர்.

பின்னர் கோவில் பின்புறம் குவித்து வைக்கப்பட்டு உள்ள சாணத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. அங்கு தமிழக-கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்தனர். அவர்கள் அங்கு கொட்டி வைக்கப்பட்ட சாணத்தை உருண்டையாக வடிவமைத்தனர். அதைத்தொடர்ந்து பக்தர்கள், ஒருவர் மீது ஓருவர் சாணத்தை வீசி எறிந்து கொண்டாடினார்கள்.

இந்த பாரம்பரிய நிகழ்ச்சியை பெண்கள் ஆர்வத்துடன் பார்த்து கைதட்டி உற்சாகப்படுத்தி ரசித்தனர். நிகழ்ச்சிக்கு பிறகு பக்தர்கள் அனைவரும் குளத்துக்கு சென்று நீராடிவிட்டு பீரேஸ்வரரை வழிபட்டனர்.

பக்தர்கள் விளையாடிய சாணத்தை விவசாயிகள் ஆர்வத்துடன் எடுத்து சென்று தங்கள் விளைநிலங்களில் இட்டனர். அவ்வாறு இட்டால் தங்கள் விவசாய நிலத்தில் பயிர்கள் நன்றாக இருக்கும் என்று அவர்களின் நம்பிக்கையாக உள்ளது.
Tags:    

Similar News