செய்திகள்
கோப்புபடம்

குடும்பம் நடத்த வர மறுத்த பெண்ணுக்கு கத்திக்குத்து - கணவர் ஆத்திரம்

Published On 2021-10-13 10:54 GMT   |   Update On 2021-10-13 10:54 GMT
திருத்தங்கல் அருகே குடும்பம் நடத்த வர மறுத்த பெண்ணை கணவர் கத்தியால் குத்திய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர்:

விருதுநகர் மாவட்டம், திருத்தங்கல் சரஸ்வதி நகரைச் சேர்ந்தவர் அங்குசாமி. இவரது மகள் பாண்டீஸ்வரி (வயது 23). இவர்களுக்கும், அருப்புக்கோட்டையைச் சேர்ந்த ஒருவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்த பாண்டீஸ்வரி, பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டார்.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அவர் வாசுதேவநல்லூரைச் சேர்ந்த ராஜூ என்ற அங்கால் ராஜூவை திருமணம் செய்தார். பின்னர் இருவரும் கோயமுத்தூர் சென்று வசித்து வந்தனர்.

ஆனால் கடந்த 2 வாரத்திற்கு முன்பு ராஜூவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பாண்டீஸ்வரி தந்தை வீட்டுக்கு வந்து விட்டார்.

இந்த சூழலில் திருத்தங்கல் வந்த ராஜூ, மனைவியை குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார். ஆனால் பாண்டீஸ்வரி அதற்கு மறுத்து விட்டார்.

இதனைத் தொடர்ந்து திருத்தங்கல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்திருப்பதாகவும், விசாரணைக்கு வர வேண்டும் என்றும் ராஜூ கூறிச்சென்றார்.

அதன்படி பாண்டீஸ்வரி தனது தந்தை அங்குச்சாமியுடன் போலீஸ் நிலையம் சென்றார். ஆனால் அங்கு புகார் எதுவும் வரவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.

அதன் பிறகு பாண்டீஸ்வரி, அங்குச்சாமி வீட்டுக்கு திரும்பி வந்தபோது ராஜூ வழிமறித்து வாக்குவாதம் செய்தார். ஆத்திரம் அடைந்த அவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பாண்டீஸ்வரி கழுத்தில் குத்தினார். இதில் பலத்த காயமடைந்த அவர் சிகிச்சைக்காக சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

அவர் கொடுத்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News