செய்திகள்
கொள்ளை

கருப்பாயூரணியில் டாக்டர் வீட்டில் 50 பவுன் நகை-பணம் கொள்ளை

Published On 2021-10-04 08:17 GMT   |   Update On 2021-10-04 08:17 GMT
கருப்பாயூரணியில் டாக்டர் வீட்டில் நகை- பணம் கொள்ளை போனது அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை:

மதுரை, கருப்பாயூரணி விக்னேஷ் அவென்யூவைச் சேர்ந்தவர் பிரேம்குமார் (வயது 48), பல் டாக்டர். அதே பகுதியில் பல் மருத்துவமனை நடத்தி வருகிறார்.

பிரேம் குமாரின் தாய்-தந்தை தேனி மாவட்டம், கம்பத்தில் வசித்து வருகின்றனர். பிரேம்குமார் குடும்பத்தினர் கடந்த 29-ந் தேதி காலை வீட்டை பூட்டி விட்டு கம்பத்துக்கு சென்றனர்.

அந்த நேரத்தில் மர்மநபர்கள், டாக்டர் வீட்டில் மாடியில் உள்ள இரும்பு கதவை பிளந்து உள்ளே புகுந்தனர். பின்னர் வரவேற்பறையின் மரக்கதவை உடைத்து வீட்டுக்குள் புகுந்து பீரோவில் இருந்த 10 பவுன் தங்க செயின், 10 பவுன் ஆரம், 10 பவுன் மயில் டாலர் செயின், 2 ஜோடி வளையல்- 10 பவுன், 5 பவுன் தோடு, 2 பவுன் பிரேஸ்லெட், ஒரு அடி உயர வெள்ளி குத்து விளக்கு, வெள்ளி செம்பு, 6 வெள்ளி டம்ளர்கள், மற்றும் ரூ.50 ஆயிரம் உள்பட ரூ.10 லட்சத்து 29 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

பிரேம்குமார் நேற்று மதியம் வீடு திரும்பினார். வீட்டில் பொருட்கள் சிதறி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். படுக்கை அறைக்கு சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த 50 பவுன் நகைகள் மற்றும் பணம் கொள்ளை போனது தெரியவந்தது.

இது குறித்து கருப்பாயூரணி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது தெருமுனை வரை ஓடிச்சென்று நின்று விட்டது. கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர்.

கருப்பாயூரணியில் டாக்டர் பிரேம் குமாரின் வீடு பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் உள்ளது. இத்தனைக்கும் மத்தியில் மர்மநபர்கள் மாடிப்படி வழியாக கதவை உடைத்து வீட்டுக்குள் புகுந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து கருப்பாயூரணி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் வழக்குப்பதிவு செய்து அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமிராவை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்.

கருப்பாயூரணியில் டாக்டர் வீட்டில் நகை- பணம் கொள்ளை போனது அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News