ஆன்மிகம்

பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்

Published On 2019-06-22 04:42 GMT   |   Update On 2019-06-22 04:42 GMT
பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவிலில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணி முதல் 10.30 மணிக்கும் கோவில் கோபுரக் கலசங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது.
புதுச்சேரி- திண்டிவனம் சாலையில் அமைந்துள்ள பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவிலில் கடந்த 2007-ம் ஆண்டு 36 அடி உயரமுள்ள விஸ்வரூப ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலை நிறுவப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என்பது ஆகம விதி ஆகும்.

அதன்படி தற்போது ஆஞ்சநேயர்-விநாயகர், புதிதாக 7.5 அடி உயரத்தில் அமைக்கப்பட்டு உள்ள பட்டாபிஷேக ராமசந்திரமூர்த்தி, ஸ்ரீவாரி வெங்கடாஜலபதி சன்னதிகளில் உள்ள விமானங்கள் மற்றும் 5 நிலை ராஜகோபுரம் ஆகியவற்றுக்கு நாளை (ஞாயிற்றுக்கிழமை) கும்பாபிஷேகம் நடக்கிறது. இதையொட்டி கடந்த திங்கட்கிழமை முதல் யாக சாலை பூஜைகள் தொடங்கி நடந்து வருகின்றன.

இன்று (சனிக்கிழமை) நாடு முழுவதும் உள்ள அனைத்து கோவில்களில் இருந்து பிரசாதம் ஊர்வலமாக எடுத்து வந்து யாகசாலையில் சேர்க்கப்படுகிறது. தொடர்ந்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணி முதல் 10.30 மணிக்கும் கோவில் கோபுரக் கலசங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது.

தொழிலதிபர் டி.வி.எஸ். குழும நிறுவனங்களின் தலைவருமான வேணு சீனிவாசன் தலைமையில் விழா குழு அமைக்கப்பட்டு உள்ளது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நாளை (ஞாயிற்றுக்கிழமை) திண்டிவனம் மற்றும் புதுச்சேரியில் இருந்து கோவிலுக்கு இலவச பேருந்து வசதி செய்யப்பட்டு உள்ளது. கும்பாபிஷேகம் அன்று சுமார் 5 லட்சம் பேருக்கு அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கப்படுகிறது.
Tags:    

Similar News