ஆன்மிகம்
கடம்பவன நாதர் கோவில்

தேவாரப்பாடல் பெற்ற கடம்பவன நாதர் கோவில்

Published On 2020-09-23 01:25 GMT   |   Update On 2020-09-23 01:25 GMT
கடம்பவன நாதர் கோவில், தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் 65-வது திருத்தலம் ஆகும். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
திருச்சிராப்பள்ளிக்கு வடமேற்கே 33 கிலோமீட்டர் தொலைவில், கரூர் நெடுஞ்சாலையில் உள்ள காவிரி பாயும் வளமான நகரம் குளித்தலை. இந்த ஊரானது, கடம்பதுறை, தட்சிணாகாசி, குழித்தண்டலை உள்ளிட்ட பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. இங்குள்ள கடம்பவன நாதர் கோவில், தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் 65-வது திருத்தலம் ஆகும்.

‘துறை’ என்றால் ‘ஆற்றின் கரையோரம் அமைந்த ஊர்’ என்று பொருள்படும். எனவே கடம்ப மரங்கள் நிறைந்த காவிரிக்கரை ஊர் என்பதால் ‘கடம்பந்துறை’ என்ற சிறப்பு பெயரைப் பெற்றது. பெயருக்கு ஏற்ப திருக்கோவிலின் வெளிச்சுற்றில் உள்ள நந்த வனம் முழுவதும் கடம்ப மரங்கள் நின்று அசைந்தாடுகின்றன. இத்தல கடம்பவன நாதருக்கு கடம்பமரம் தல விருட்சமாக இருப்பதில் ஆச்சரியமில்லை.

வடக்கு நோக்கியுள்ள ஐந்துநிலை ராஜகோபுரத்தைத் தரிசித்து விட்டு உள்ளே நுழைந்தால், நந்தி தேவர் அமர்ந்திருக்க கருவறையின் உள்ளே சிறிய சிவலிங்கத் திருமேனியுடன் காட்சி தருகிறார் கடம்பவனநாதர். இவர் வடக்கு திசை நோக்கி வீற்றிருப்பது பெருஞ்சிறப்பாகச் சொல்லப்படுகிறது. தமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான சிவாலயங்களில் சென்னை கோயம்பேடு குறுங்காலீசுவரரும், குளித்தலை கடம்பவனநாதரும் மட்டும்தான் வடக்கு நோக்கி அமர்ந்துள்ளனர். மூலவருக்குப் பின்புறம் கருவறையில் சப்த கன்னியர்கள் வீற்றிருப்பது எங்குமில்லாத சிறப்பாகும்.

தல வரலாறு

தூம்ரலோசனன் என்ற அரக்கனை அழிக்க அம்பிகை துர்க்கை வடிவெடுத்துப் போரிடச் சென்றாள். அவளால் அரக்கனின் அட்டகாசத்தை அடக்க முடியாமல் போக, சப்த கன்னியரை துணைக்கு அழைத்துக் கொண்டு போரிட்டாள். அதன்பின் வெற்றி கிடைத்தது. அசுரனை அழித்த தோஷம் நீங்க, துர்கை ஆனவள் இத்தல இறைவனை தினமும் பூஜிப்பதாக ஐதீகம். எனவே இத்திருக்கோவிலில் துர்க்கை அம்மன் திருமேனி இல்லை.

சப்தகன்னியருள் ஒருவரான சாமுண்டியே துர்க்கையாக இருப்பதாகவும், அவருக்கே ராகுகால பூஜை நடைபெறுவதாகவும் கூறுகின்றனர். சுவாமி வடக்கு நோக்கி இருப்பதால் எதிரே தெற்கு நோக்கியபடி ஆடவல்லான் நடராஜர் இருக்கிறார். அவரது காலடியில் முயலகன் இல்லை. பொதுவாக ஒரு ஆலயத்தை பிரகார வலம் வரும்போது, கருவறை கோஷ்டத்தின் பின்புறம் லிங்கோத்பவரோ, மகாவிஷ்ணுவோ இருப்பார்கள். ஆனால் இங்கே தட்சிணாமூர்த்தி இருக்கிறார். கிழக்கு நோக்கியபடி விநாயகர், வள்ளி-தெய்வானை சமேத முருகப்பெருமான், அவர் எதிரே லிங்கோத்பவர் காட்சி தருகிறார்கள்.

கிழக்கு நோக்கிய தனிச்சன்னிதியில் அம்பிகை ‘முற்றிலா முலை அம்மை’ என்ற பெயரில் அருளாட்சி செய்கிறாள். அப்பர் முதல் பதிகத்தில் முதல் வரியிலேயே இந்த அன்னையைப் பற்றி குறிப்பிடுகிறார். அறுபத்து மூவர் மூர்த்தங்களும், நவக்கிரகங்களும் திருக்கோவில் சுற்றில் காணப்படுகின்றன. கடம்பவன நாதரை சப்தகன்னியர் மட்டுமில்லாது அகத்தியரும், கண்வ முனிவரும் வழிபட்டுள்ளனர்.

முருகப்பெருமான் பூஜித்த தலம் என்பதால் ‘கந்தபுரம்’ என்றும், அசுரனிடம் இருந்து திருமால் வேதங்களை மீட்க இத்தல இறைவனை வழிபட்டதால் ‘சதுர்வேதபுரம்’ என்றும் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. “காமன் காய்ந்த பிரான் கடம்பந்துறை நாமம் ஏந்த தீவினை நாசமே” என்ற அப்பரின் வாக்குப் புனிதமாக நம் தீவினைகள் தீர்க்கும் கடம்பந்துறை திருக்கோவிலை ஒரு முறை வலம் வரலாமே.
Tags:    

Similar News