செய்திகள்
கிர்பான் வைத்திருந்த சீக்கியர் தடுத்து நிறுத்தப்பட்ட காட்சி

பிரிட்டனில் ‘கிர்பான்’ வைத்திருந்த சீக்கியரை தடுத்து நிறுத்தி விசாரித்த போலீஸ்

Published On 2019-08-10 10:48 GMT   |   Update On 2019-08-10 10:48 GMT
பிரிட்டனில் சீக்கியர் ஒருவர் தனது மத நம்பிக்கை சார்ந்த ‘கிர்பான்’ எனப்படும் குத்து வாள் வைத்திருந்ததற்காக போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
லண்டன்:

பிரிட்டன் நாட்டில் பல சீக்கியர்கள் வசித்து வருகின்றனர். சீக்கியர்கள் அவர்களது மதத்தின் கட்டளைகளை கடைபிடிக்க அவர்களுக்கு சட்டப்பூர்வமாக அனுமதி உள்ளது. இந்நிலையில் நேற்று பிர்மிங்காம் நகரின் புல் ஸ்ட்ரீட் பகுதியில் சீக்கியர் ஒருவர் மத அடையாளமான கிர்பான் எனப்படும் குத்துவாளை வைத்திருந்தார். இதைக்கண்ட அங்கிருந்த போலீஸ் ஒருவர் அவரை தடுத்து நிறுத்தி கடுமையாக விசாரித்தார். 

அந்த சீக்கியர், ‘நான் விரும்பினால் இதை வைத்துக்கொள்ள எனக்கு அனுமதி உள்ளது’, என்று விளக்கம் அளிக்கிறார். ஆனால் அந்த போலீஸ் அவர் கூறியதை கருத்தில் கொள்ளாமல் அவரை காவல் நிலையம் கொண்டு செல்ல வேண்டும் என மற்ற அதிகாரிகளுக்கு தகவல் அளித்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. 

இந்த வீடியோ பிரிட்டன் - பஞ்சாபி குழுவின் பேஸ்புக் பக்கத்தில் பகிரப்பட்டது. இதையத்து பிரிட்டன் சீக்கிய அமைப்பு இதற்கு கண்டனம் தெரிவித்தது. “அவர் ஒரு சீக்கியராக இருக்கும் நிலையில் அவர் அந்த வாள் வைத்திருப்பதில் தவறேதுமில்லை” என தெரிவித்தது. 

சமூக வலைதளங்களில் இந்த வீடியோ பரவியதால் விதிமுறைகளை அறியாத அந்த காவலரை பலரும் விமர்சித்து வருகின்றனர். குற்றம் நடந்துவிடக்கூடாது என்பதற்காக போலீசார் செய்யும் ஒரு சாதாரண முன்னெச்சரிக்கை விசாரணை தான் இது என சிலர் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.

இதேபோல் சமீபத்தில் காட்விக் விமான நிலையத்தில் கிர்பான் வைத்திருந்த ஒரு சீக்கியர் தடுத்து நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News