செய்திகள்
கோப்புபடம்

10-ம் வகுப்பு தேர்வைப் போல சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வும் ரத்து? ஆன்லைனில் நடத்த யோசனை

Published On 2021-05-14 07:54 GMT   |   Update On 2021-05-14 07:56 GMT
மகாராஷ்டிரா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்ததால், பத்தாம் வகுப்பு சி.பி.எஸ்.இ., தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

புதுடெல்லி

சி.பி.எஸ்.இ. எனும் மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் கீழ் செயல்படும், பள்ளிகளில் படிக்கும் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு, மே மாதம் 4-ந் தேதி முதல் பொதுத்தேர்வு துவங்க திட்டமிடப்பட்டது. இந்நிலையில், மகாராஷ்டிரா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்ததால், பத்தாம் வகுப்பு சி.பி.எஸ்.இ., தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. பிளஸ் 2 தேர்வு ஒத்திவைக்கப்பட்டது.

நாடு முழுவதும் கொரோனா தாக்கம் நீடிப்பதால் பிளஸ் 2 தேர்வையும் ரத்து செய்யவேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன. இந்த கோரிக்கைகளையும் நிலவும் சூழ்நிலையையும் கருத்தில் கொண்டு சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வையும் ரத்து செய்யும் முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுபற்றி சி.பி.எஸ்.இ வட்டாரங்கள் கூறியதாவது, ’தற்போதைய சூழ்நிலையில் தேர்வை நடத்துவது என்பது இயலாத காரியம். எனவே தேர்வை ரத்து செய்து விட்டு முடிவுகளை எதன் அடிப்படையில் கணக்கிடுவது என்பதுபற்றி ஆராய்ந்துவருகிறோம்.


கடந்த ஆண்டைவிட 4 மடங்கு மோசமான சூழ்நிலை நிலவுகிறது. எனவே ரத்து செய்வதுதான் சரியான முடிவாக இருக்கும். ஆனால் எந்த முடிவாக இருந்தாலும் ஜூன் மாதத்துக்கு பின் இறுதி முடிவு எடுக்கப்படும். ஆனால் இப்போதைக்கு தேர்வை நடத்தும் திட்டம் இல்லை’. இவ்வாறு அவர்கள் கூறினார்கள். சில கல்வியாளர்கள் இதுகுறித்து கருத்து தெரிவித்தபோது ‘முழுமையாக ரத்து செய்வதற்கு பதிலாக ஆன்லைனில் தேர்வை நடத்தலாம்’ என்கின்றனர்.

Tags:    

Similar News