சிறப்புக் கட்டுரைகள்
கருணை தெய்வம் காஞ்சி மகான்

கருணை தெய்வம் காஞ்சி மகான்- 25

Published On 2022-01-19 09:41 GMT   |   Update On 2022-01-19 09:41 GMT
கருணை தெய்வம் காஞ்சி மகான் குறித்து ஆன்மிக சொற்பொழிவாளர் பி. சுவாமிநாதன் மாலைமலர் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.


மகா பெரியவா தற்போது வேலூர் வழியே காஞ்சிக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறார்.

வேலூரில் பெரியவாளுக்குக் கிடைத்த வரவேற்புகளையும், உள்ளூர் ஆன்மிக அன்பர்களின் பூரிப்பையும் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

சித்தூர் எல்லையில் துவங்கி வேலூர் மாவட்டத்தில் மட்டும் 13 இடங்களில் பெரியவாளுக்கு பூர்ணகும்பம் கொடுத்த பாக்கியம் இந்த செல்லப்பா சாஸ்திரிகளுக்குக் கிடைத்தது என்று பார்த்தோம்.

செல்லப்பா சாஸ்திரிகளுக்கு இந்த பாக்கியத்தை வழங்கியவர் அப்போது வேலூர் மாவட்ட ஆட்சியராக இருந்த நாராயணன். மிகவும் பக்தி சிரத்தையானவர். பெரியவா மீது கலெக்டருக்கு அத்தனை பக்தி.

மகா பெரியவாளை வரவேற்கும் ஒவ்வொரு நிகழ்விலும் உற்சாகமாகக் கலந்து கொண்டார் கலெக்டர் நாராயணன்.

பெரியவாளை வரவேற்கும் வைபவங்களில் கூட்டமான கூட்டம். வருகின்ற கூட்டத்தை எவராலும் கட்டுப்படுத்த முடியவில்லை. பல காலம் யாத்திரையை முடித்துக் காஞ்சிக்குத் திரும்பிக் கொண்டிருக்கிற கருணைக் கடலை கண்ணாரக் கண்டு ஆசி பெற வேண்டும் என்று எல்லோருக்கும் ஆசை. அக்கம்பக்கத்து ஊர்களில் இருந்தெல்லாம் பக்தர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு வந்தனர்.

வேலூரில் பெரிய வாளை வரவேற்கிற நிகழ்வுகளுக்கான பொறுப்பு மாவட்ட கலெக்டர் நாராயணனிடம் கொடுக்கப்பட்டிருந்தது.

ஒவ்வொரு இடத்திலும் பெரியவாளுக்குப் பூர்ணகும்பம் கொடுத்து வரவேற்பதற்காக செல்லப்பா சாஸ்திரிகளையும் சேர்த்து மொத்தம் மூன்று வைதீகர்கள்.

மூவரும் ஆளுக்கு ஒரு பூர்ணகும்ப கலசத்தைக் கையில் வைத்துக் கொண்டு மந்திரங்கள் சொல்லி பெரியவாளை வரவேற்றார்கள்.

செல்லப்பா சாஸ்திரிகள் கைகளில் மட்டும் வெள்ளிக் குடம் காணப்படும். அந்தக் குடத்தைத் தர்ப்பைகள் மற்றும் மாவிலைகளினால் அலங்கரித்திருப்பார்.

‘காஞ்சிக்குச் செல்கிற பெரியவாதங்கள் ஊரில் சிறிது நாட்கள் தங்க வேண்டும்’ என்று வேலூர்வாசிகளுக்கு ஆசை. எனவே, பலரது அழைப்பையும் ஏற்றுக் கொண்டு வேலூரிலேயே சுமார் இரண்டு வாரங்கள் தங்கினார் பெரியவா.

வேலூர் கோட்டைக்கு உள்ளே ஜலகண்டேஸ்வரர் கோயிலில் பெரியவா தங்குவதற்கு ஏற்பாடு ஆகி இருந்தது.

நித்தமும் வேத பாராயணம், திருமுறை பாராயணம் என்று வேலூரே அமர்க்களப்பட்டது.

எம்.எஸ்.சுப்புலட்சுமி அம்மா, பத்மா சுப்ரமண்யம் என்று ஏராளமான இசைப் பிரபலங்களும் பெரியவா தரிசனத்துக்கு நித்தமும் வந்தார்கள். எனவே, வேலூர்க் கோட்டையில் இசைக் கச்சேரியும் களை கட்டியது.

வேலூரில் அப்போது சில காலமாக மழையே இல்லை.

கோயிலினுள் அமைந்திருக்கிற குளம் வறண்டு காணப்பட்டது.

‘நம்மூரில் பெரியவா அடியெடுத்து வைத்திருக்கிற வேளையில் ஊரே வறண்டு காணப்படுகிறதே... குளத்தில் நீர் இருந்தால் பெரியவா நித்தமும் இங்கே ஸ்நானம் செய்வாரே...’ என்று உள்ளூர்க்காரர்கள் பலரும் தங்களுக்குள் குறைப்பட்டுக் கொண்டனர்.

பக்தர்களின் மனக் குறையை பரந்தாமன் அறிய மாட்டாரா?

தன் மீது உண்மையான அன்பு கொண்ட வேலூர் மக்களின் மனக் குறை பெரியவா ளுக்குத் தெரியாமலா இருக்கும்?!

என்ன அதிசயம் நடந்தது தெரியுமா?

முதல் நாள் சாயங்காலம்தான் பெரியவா வந்தார். அன்றைய தினம் இரவு ஒரு மழை பிடித்தது வேலூரில். மழை என்றால், சாதாரண மழை இல்லை. கொட்டோ கொட்டென்று கொட்டித் தீர்த்து விட்டது.

‘வேலூர் நகரத்தில் பெரியவா தன் திருவடிகளைப் பதித்த மறுகணம் வருண பகவான் தன் கருணையை மழையாகப் பொழிந்து விட்டார்’ என்று ஊர்க்காரர்கள் புளகாங்கிதம் அடைந்தனர்.

வேலூரில் தண்ணீரே இல்லாமல் காணப்பட்ட குளம், குட்டைகள் எல்லாம் நிரம்பின.

ஜலகண்டேஸ்வரர் கோயிலுக்குள் இருந்த குளம் மழை நீரால் நிரம்பியது. முதல் நாள் வறண்டு காணப்பட்ட குளம், இன்று தளும்பித் தளும்பிக் காணப்பட்டது.

பிறகென்ன? அடுத்த நாள் காலை பெரியவா இந்தக் குளத்தில்தான் ஸ்நானம் செய்தார். உள்ளூர்க் காரர்களின் ஆசையும் நிறை வேறியது. தன் மூன்று மகள்களையும் அழைத்துக் கொண்டு பெரியவா தரிசனத்துக்கு வந்தார் செல்லப்பா சாஸ்திரிகள். தனக்கு பூர்ணகும்பம் கொடுத்து வரவேற்றவர் என்பதைப் பார்த்த மாத்திரத்தில் அறிந்து கொண்டார் பெரியவா. மூன்று மகள்களையும் சுலோகங்கள் சொல்லச் சொன்னார். அதன்படி பெண் குழந்தைகளும் பக்தி சிரத்தையுடன் சுலோகங்களைச் சொன்னார்கள். எல்லோருக்கும் பிரசாதம் தந்து அனுப்பினார் பெரியவா.

இப்போதுதான் பெரியவாளுக்குப் பூர்ணகும்பம் கொடுத்து வரவேற்றார் என்றில்லை. இதற்கு முன்னால் 1960-களில் வேலூர் வந்த பெரியவாளுக்கும் செல்லப்பா சாஸ்திரிகள்தான் பூர்ணகும்ப வரவேற்பு தந்திருக்கிறார்.

அப்போது வேலூர் மாவட்ட கலெக்டராக இருந்தவர் ராமமூர்த்தி.

பெரியவாளை வரவேற்கும்போது பஞ்சகச்ச வேஷ்டி அணிந்து காணப்படுவார் இந்த கலெக்டர். ஆச்சரியமாக இருக்கிறதல்லவா?

செல்லப்பா சாஸ்திரிகள் அப்போது சிறு வயது. பிரம்மச்சாரி.

பெரியவாளை வரவேற்கும் விதமாக ஒரு சிறு பூர்ணகும்ப கலசத்தைத் தன் கையில் வைத்துக் கொண்டிருந்தார் கலெக்டர் ராமமூர்த்தி. செல்லப்பா சாஸ்திரிகள் அவருக்கு அருகே நின்று கொண்டிருந்தார். பெரியவா வரும்போது வேத மந்திரங்களைச் சொல்ல வேண்டிய பொறுப்பு செல்லப்பாவுக்கு. பெரும் பக்தர்கள் கூட்டமே அங்கே காத்திருந்தது.

பெரியவா வந்து விட்டார். கையில் பூர்ணகும்ப கலசம் வைத்துக் கொண்டிருக்கும் கலெக்டர் ராமமூர்த்தியின் எதிரே வந்து நின்றார் பெரியவா. அவ்வளவுதான்... அடுத்த கணம் கணீரென்ற குரலில் கொஞ்சமும் பிசிறு இல்லாமல் ஒரு சிறு மந்திரத்தைச் சொல்லி முடித்தார் செல்லப்பா. சுமார் ஐந்து நிமிடங்களுக்கு அங்கே மந்திர ஒலிதான் ஆக்கிரமித்திருந்தது.

ஒரு புன்னகையுடன் இந்த வரவேற்பை ஏற்றுக் கொண்டு அங்கு கூடி இருந்த அனைவரையும் ஆசிர்வதித்தார் பெரியவா. பிறகு, என்ன தோன்றியதோ தெரியவில்லை... கலெக்டர் ராமமூர்த்தியின் கையில் இருக்கும் கலசத்தைக் காண்பித்து, ‘‘அந்த தீர்த்தத்தை எனக்கு புரோட்சணம் பண்ணு’’ என்று செல்லப்பா சாஸ்திரிகளிடம் சொன்னார்.

சிறு வயது. இந்த சிறுவனையா நீர் புரோட்சிக்கச் சொல்கிறார் என்று அங்கே இருந்த பலரும் வியந்து பார்த்தனர்.

இது அந்த சிறு வயதிலேயே செல்லப்பாவுக்குக் கிடைத்த பெரும் பேறு.

அதன் பின் வேலூர் மத்தியச் சிறைச் சாலைக்கு வந்து அங்கு இருக்கும் கைதிகளுக்குப் பெரியவா ஆசியுரை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

வேலூரில் பெரியவாளை வரவேற்பதற்காக நடந்த அனைத்து நிகழ்விலும் முன்னிலை வகித்தார் மாவட்ட ஆட்சியர் ராமமூர்த்தி.

சிறைச்சாலை கைதிகளுக்கு ஆசி வழங்க பெரியவா அங்கே வரும்போது அவரை விமரிசையாக வரவேற்க வேண்டும் என்று விரிவான ஏற்பாடுகளைச் செய்தார் கலெக்டர் ராமமூர்த்தி. சிறைச் சாலையில் சூப்பரெண்டாக இருந்த லட்சுமிநாராயணனும் இந்த வரவேற்புக் குழுவில் இருந்தார்.

சிறைச்சாலை முகப்பில் மகா பெரியவாளை வரவேற்கும் விதமாக பூர்ணகும்பம் சுமந்து மந்திரம் சொல்லும் பாக்கியம் செல்லப்பா சாஸ்திரிகளுக்கே கிடைத்தது.

சிறைச்சாலை முகப்புக்கு வந்த பெரியவாளை வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றார்கள். ஆயிரக்கணக்கான கைதிகள் அங்கே அமர வைக்கப்பட்டிருந்தனர். கைதிகளுக்கு உற்சாகம் தரும் விதமாகவும், பக்தியின் அவசியத்தைப் பற்றியும் அவர்களிடம் பெரியவா உரையாற்றினார்.

மகானை வரவேற்கும் விதமாக கைகளைத் தட்டி ஆரவாரம் செய்து கைதிகள் வணங்கினார்கள். சிறைக்குள் இருக்கும் கைதிகள் பெரும்பாலானோர் ஏதோ ஒரு காலத்தில் தங்களையும் அறியாமல் உணர்ச்சிவசப்பட்டு கோபப்பட்டு பொறுமை இழந்து குற்றம் செய்தவர்கள்தான்.

எல்லோரின் மனசுக்குள்ளும் ஒரு அன்பு இருக்கும் அல்லவா?

அந்த அன்பு அன்றைய தினம் கைதிகளிடம் இருந்து வெளிப்பட்டது.

ஒவ்வொருவரையும் பார்த்து ஆசிகளை வழங்கினார் மகா பெரியவா.

Tags:    

Similar News