செய்திகள்
கைதான கள்ளக்காதல் ஜோடி முத்துராக்கு-வடிவேலு

பரமக்குடி அருகே மூதாட்டி கொலை: கள்ளக்காதல் ஜோடி கைது

Published On 2021-05-01 09:46 GMT   |   Update On 2021-05-01 09:46 GMT
பரமக்குடி அருகே மூதாட்டி கொலை: கள்ளக்காதல் ஜோடி கைது உல்லாசத்துக்கு இடையூறாக இருந்ததால் தீர்த்துக்கட்டியது அம்பலம்

பரமக்குடி:

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே உள்ள அரியனேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மனைவி காளி முத்தம்மாள் (வயது 92). சில வருடங்களுக்கு முன்பு கணவர் கோவிந்தன் இறந்து விட்டார்.

இவர்களது 2 மகன்களுக்கு திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர். மூதாட்டி தனது வீட்டின் அருகே உள்ள தென்னந்தோப்புக்கு தினமும் சென்று வருவது வழக்கம். நேற்று காலை வீட்டிலிருந்து தென்னந் தோப்புக்கு மூதாட்டி காளிமுத்தம்மாள் சென்றார்.

அங்கு வந்த மர்ம நபர்கள் மூதாட்டியை அடித்து அருகில் உள்ள மோட்டார் ரூமுக்குள் கொண்டு சென்று நகைகளை கழற்றி கொடுக்குமாறு கேட்டனர். அதற்கு மூதாட்டி மறுத்ததால் மூதாட்டியின் தலையை பிடித்து சுவற்றில் அடித்து கொலை செய்தனர். மூதாட்டி காதில் இருந்த தோடை எடுக்க முடியாததால் காதை அறுத்து தோடை எடுத்துக் கொண்டனர்.

மேலும் கையில் அணிந்திருந்த வளையல்களையும் எடுத்துக்கொண்டு மொத்தம் 18 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.

இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக், பரமக்குடி டி.எஸ்.பி. வேல்முருகன் மற்றும் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

இந்த கொலை தொடர்பாக மாவிலங்கை பகுதியைச் சேர்ந்த வடிவேலு என்பவரை போலீசார் பிடித்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது கீழ்க்கண்ட தகவல்கள் தெரிய வந்தன.

மூதாட்டியின் தென்னந்தோப்பில் 10 நாட்களுக்கு முன்பு வரை வேலை செய்து வந்த பாண்டியூரை சேர்ந்த முத்துராக்கு (28) என்பவருக்கும் வடிவேலுவுக்கும் ஒரு வருடமாக கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது.

முத்துராக்கு தோப்பில் வேலை செய்யும்போது வடிவேலு தோப்வுக்கு வந்து மோட்டார் ரூமில் இருவரும் உல்லாசமாக இருப்பார்கள். இதனை அறிந்த மூதாட்டி முத்துராக்குவை வேலையை விட்டு நிறுத்திவிட்டார்.

இதனால் ஆத்திரம் அடைந்த வடிவேலு நேற்று தனியாக இருந்த மூதாட்டியிடம் எங்களது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்து விட்டாய். நான் மிகவும் கஷ்டத்தில் இருக்கிறேன். உனது நகைகளை என்னிடம் கொடு என்று கேட்டார். மூதாட்டி மறுக்கவே, அவரை அடித்து நகைகளை பிடுங்கிக் கொண்டு கொலை செய்து விட்டு வடிவேலு தப்பி விட்டார்.

பின்பு இரவு 10 மணிக்கு பாண்டியூர் பகுதியில் மது போதையில் இருந்த வடிவேலுவை போலீசார் கைது செய்தனர்.

மேலும் அவரிடம் விசாரணை நடத்தியபோது நகைகளை முத்துராக்கு வீட்டில் வைத்திருப்பதாக கூறினார். அதன்பின் முத்துராக்குவின் வீட்டிற்கு போலீசார் சென்று சோதனை செய்து நகையை கைப்பற்றினர்.

இந்த சம்பவத்துக்கு உடந்தையாக இருந்ததாக முத்துராக்கையும், கொலை செய்த குற்றத்திற்காக வடிவேலுவையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

Similar News