செய்திகள்
பிரக்யா சிங் தாகூர்

மேற்குவங்காளத்தில் இந்து ராஜ்ஜியம் அமையும் - பாஜக எம்.பி. பிரக்யா சிங் தாகூர் பேச்சு

Published On 2020-12-13 11:01 GMT   |   Update On 2020-12-13 11:01 GMT
மேற்குவங்காளத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றிபெற்று இந்து ராஜ்ஜியம் அமையும் என எம்.பி. பிரக்யா சிங் தாகூர் தெரிவித்துள்ளார்.
போபால்:

294 தொகுதிகளை கொண்ட மேற்குவங்காள சட்டசபை தேர்தல் 2021-ம் ஆண்டு மே மாதம் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்கள் உள்ளபோதும் அரசியல் கட்சியினர் தற்போது முதலே பிரசார கூட்டங்களை நடத்தத்தொடங்கியுள்ளனர்.

வரும் சட்டசபை தேர்தலில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கும், பாரதீய ஜனதா கட்சிக்கும் இடையே நேரடி போட்டி ஏற்பட உள்ளது. காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் இந்த தேர்தலில் முக்கிய கட்சியாக இருக்கும் என கருதப்படுகிறது.

ஆட்சியை தக்கவைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு திரிணாமுல் காங்கிரசும், இந்த முறை மேற்குவங்காளத்தை கைப்பற்றிவிட வேண்டும் என்ற முனைப்புடன் பாஜகவும் தற்போதில் இருந்தே தேர்தல் தொடர்பான பிரசார நிகழ்ச்சிகள், பொதுகூட்டங்கள் நடத்த தொடங்கிவிட்டன. 

இதனால், மேற்குவங்காள அரசியலில் இப்போதுமுதலே தேர்தல் பரபரப்பு அடையத்தொடங்கியுள்ளது. 

இதற்கிடையில், கடந்த 10-ம் தேதி மேற்குவங்காளத்தின் டைமண்ட் ஹார்பர் பகுதிக்கு பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா தேர்தல் பிரசார நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்றார். அப்போது, ஜேபி நட்டா பயணித்த வாகனமும், அவரது பாதுகாப்பிற்கு வந்த வாகனங்கள் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த விவகாரத்தில் மேற்குவங்காளத்தின் மம்தா பானர்ஜி அரசுக்கும், மத்திய பாஜக அரசுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. மேலும், இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக மேற்குவங்காளத்தில் பணியில் இருந்த 3 ஐபிஎஸ் அதிகாரிகள் மத்திய பணிக்கு அதிரடியாக மாற்றம் செய்து மத்திய உள்துறை செயலாளர் உத்தரவிட்டார்.

இந்நிலையில், ஜேபி நட்டா வாகனம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக மத்தியபிரதேசத்தின் சர்ச்சைக்குரிய பாஜக எம்.பி. யான பிரக்யா சிங் தாகூரிடம் இன்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். 

இதற்கு பதிலளித்த பிரக்யா சிங்:-

(மேற்குவங்காளத்தில்) தனது ஆட்சி முடிவுக்கு வர உள்ளதால் மம்தா பானர்ஜி மிகவும் வெறுப்பில் உள்ளார். வரும் சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றிபெற்று மேற்குவங்காளத்தில் இந்து ராஜ்ஜியம் அமையும்.

என்றார்.
Tags:    

Similar News