உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்.

மழைநீர் தேங்கியதால் மக்காச்சோள பயிர்கள் சேதம்

Published On 2021-12-04 07:19 GMT   |   Update On 2021-12-04 07:19 GMT
தற்போது கதிர்கள் அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் தொடர் மழையால் எவ்வித பணிகளையும் மேற்கொள்ள முடியாத நிலை உருவாகியுள்ளது.
உடுமலை:

பி.ஏ.பி., நான்காம் மண்டல பாசனத்துக்கு  உடுமலை, குடிமங்கலம் வட்டாரத்தில் 40 ஆயிரம் ஏக்கர் வரை மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சாகுபடிக்கான விதை நடவு செய்யும் போது போதிய மழை இல்லை. பயிரின் வளர்ச்சி தருணத்தில் அதிக வெயில் காரணமாக சாகுபடியில் படைப்புழு தாக்குதல் வேகமாக பரவியது. இந்நோய் தாக்குதலை கட்டுப்படுத்த முடியாமல் விவசாயிகள் திணறினர்.

இந்நிலையில் பயிர்களில் கதிர் பிடிக்கும் தருணத்தில் பரவலாக மழை பெய்ய தொடங்கியது. இதனால் பாசன நீரை பயன்படுத்த முடியாத அளவுக்கு  விளைநிலங்களில், ஈரப்பதம் காணப்பட்டது. தற்போது கதிர்கள் அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் தொடர் மழையால் எவ்வித பணிகளையும் மேற்கொள்ள முடியாத நிலை உருவாகியுள்ளது. 

படைப்புழு தாக்குதல் உள்ளிட்ட பிரச்சினைகளால் விளைச்சல் குறையும் சூழ்நிலையில் அறுவடையும் தாமதித்து வருவதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

மக்காச்சோள சாகுபடியில் குறித்த நேரத்தில் அறுவடை செய்யாவிட்டால் அதிக ஈரப்பதம் காரணமாக  பயிர்கள் சாய்வது உட்பட பிரச்சினைகள் ஏற்படும். மேலும், கதிர்களுக்குள் மழை நீர் சென்றால் அவை முளை விடும் அபாயமும் உள்ளது. மக்காச்சோள தட்டையும், உலர் தீவனத்துக்கு பயன்படுத்த முடியாது. 

தற்போது விளைநிலங்களில் வெளியேற்ற முடியாத அளவுக்கு அதிகளவு தண்ணீர் தேங்கியுள்ளதால் கவலையில் உள்ளோம். வேளாண்துறை வாயிலாக நேரடியாக கள ஆய்வு செய்து பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளுக்கு அரசிடம் நிவாரணம் பெற்றுத்தர வேண்டும்.

இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர். 
Tags:    

Similar News