உள்ளூர் செய்திகள்
முதியவர் ரெங்கசாமிக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட காட்சி.

எந்த ஆவணங்களும் இல்லாத முதியவருக்கு கொரோனா தடுப்பூசி

Published On 2022-01-12 10:10 GMT   |   Update On 2022-01-12 10:52 GMT
எந்த ஆவணங்களும் இல்லாமல் தவித்த முதியவருக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுத்த போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
திருப்பூர்:

கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ரெங்கசாமி (வயது 93). இவருக்கு மனைவி மற்றும் 4 மகன்கள் உள்ள நிலையில் அவர்களை விட்டு பிரிந்து 14 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பூருக்கு வந்தார். 

வயது முதிர்வால் எந்த வேலையும் செய்ய முடியாத நிலையில் சாலையோரத்தில் வசித்து வந்துள்ளார். அவரிடம் இந்திய குடிமகன் என்பதற்கு ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை என எந்த ஆவணங்களும் இல்லை. இதனால் கொரோனா தடுப்பூசி செலுத்த முடியாமல் தவித்து வந்துள்ளார்.

இவரது நிலையை அறிந்த பொதுமக்கள் சிலர் இதுகுறித்து தமிழக  டி.ஜி.பி. சைலேந்திரபாபுவுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனரை தொடர்பு கொண்ட டி.ஜி.பி.சைலேந்திரபாபு, முதியவரை கண்டுப்பிடித்து தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.  

இதையடுத்து திருப்பூர் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிச்சையா, முதியவர் ரெங்கசாமி குறித்து விசாரணை நடத்தினார். அப்போது அவர் திருப்பூர் ஈஸ்வரன் கோவில் அருகே வசித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

உடனே அவரை போலீசார் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு கொரோனா முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டது.

எந்த ஆவணங்களும் இல்லாமல் தவித்த முதியவருக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுத்த தமிழக காவல்துறை டி.ஜி.பி.சைலேந்திரபாபு மற்றும் திருப்பூர் போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
Tags:    

Similar News