செய்திகள்
ரோகித் சர்மா

நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் எளிதாக வெற்றி கிடைக்கவில்லை - ரோகித் சர்மா ஒப்புதல்

Published On 2021-11-18 09:12 GMT   |   Update On 2021-11-18 09:12 GMT
எல்லா நேரத்திலும் அதிரடியான ஷாட்களை ஆட முடியாது போன்றவற்றை இளம் வீரர்கள் புரிந்து கொள்ள இயலும் என கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார்.

ஜெய்ப்பூர்:

நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் தொடரில் ரோகித் சர்மா- ராகுல் டிராவிட் கூட்டணி வெற்றியுடன் கணக்கை தொடங்கியது.

ஜெய்ப்பூரில் நடந்த முதல் 20 ஓவர் போட்டியில் முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 164 ரன் எடுத்தது. இதனால் இந்தியாவுக்கு 165 ரன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

தொடக்க வீரர் மார்டின் கப்தில் 42 பந்தில் 70 ரன்னும் (3 பவுண்டரி, 4 சிக்சர்), மார்க் சேப்மேன் 50 பந்தில் 63 ரன்னும் (6 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். அஸ்வின், புவனேஸ்வர்குமார் தலா 2 விக்கெட்டும், தீபக் சாஹர், முகமது சிராஜ் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

பின்னர் ஆடிய இந்தியா 2 பந்து எஞ்சிய நிலையில் வெற்றிக்கான இலக்கை எடுத்தது. இந்திய அணி 19.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 166 ரன் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சூர்யகுமார் யாதவ் 40 பந்தில் 62 ரன்னும் (6 பவுண்டரி, 3 சிக்சர்), கேப்டன் ரோகித் சர்மா 36 பந்தில் 48 ரன்னும் (5 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். போல்ட் 2 விக்கெட்டும், சவுத்தி, சான்ட்னெர், மிச்சேல் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

விராட் கோலி 20 ஓவர் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியதால் புதிய கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டார். இதேபோல அணியின் புதிய பயிற்சியாளராக ராகுல் டிராவிட் பொறுப்பேற்றுள்ளார். இவர்கள் கூட்டணி வெற்றியுடன் கணக்கை தொடங்கியது.

இந்த ஆட்டத்தில் இந்திய அணி எளிதில் வெற்றிபெற வேண்டியது. ஒரு ஓவர் அல்லது அதற்கு முன்பே வெற்றிபெறவேண்டிய ஆட்டத்தில் கடைசிவரை சென்றுதான் வெற்றிபெற வேண்டிய நிலை ஏற்பட்டது. 3 பந்தில் 3 ரன் தேவை என்ற நிலையில் ரி‌ஷப்பண்ட் பவுண்டரி அடித்து அணியை வெற்றிபெற வைத்தார்.

இந்த வெற்றி எளிதாக கிடைக்கவில்லை என்பதை கேப்டன் ரோகித் சர்மா ஒப்புக்கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

நிச்சயமாக இந்த வெற்றி நாங்கள் எதிர்பார்த்தது போல் எளிதாக அமையவில்லை. ஆனாலும் இந்த அனுபவத்தின் மூலம் வீரர்கள் கற்றுக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது.

அதாவது எதை செய்வது அவசியம் என்பதை தெரிந்திருப்பார்கள். எல்லா நேரத்திலும் அதிரடியான ஷாட்களை ஆட முடியாது போன்றவற்றை புரிந்து கொள்ள இயலும்.

ஒரு கேப்டனாக, அணியாக வீரர்கள் வெற்றி பெற்று தந்தது மகிழ்ச்சியை அளிக்கிறது. எங்களுக்கு இது சிறந்த போட்டியாக இருந்தது. சில முக்கியமான வீரர்கள் இல்லை. இதனால் மற்ற வீரர்களுக்கு தங்கள் திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைத்தது.

சூர்யகுமார் யாதவ் எங்களது மிடில் வரிசையில் மிகவும் முக்கியமான வீரர் ஆவார். சுழற்பந்தை அவர் எளிதாக கையாண்டார். எங்களது பந்து வீச்சாளர்கள் சிறப்பாக வீசி நியூசிலாந்தை கட்டுப்படுத்தினார்கள்.

போல்ட் பந்தில் நான் ஆட்டம் இழந்தது என்பது என்னுடைய பலவீனத்தை அவர் நன்கு புரிந்து வைத்துள்ளார். அவருடைய பலம் எனக்கு தெரியும். மகிழ்ச்சியுடன் வெற்றி கிடைத்தது. முதல் வெற்றி எப்போதுமே சிறந்தது.

இவ்வாறு ரோகித் சர்மா கூறியுள்ளார்.

இந்த வெற்றி மூலம் 3 போட்டி கொண்ட தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 2-வது 20 ஓவர் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நாளை நடக்கிறது. 

Tags:    

Similar News