செய்திகள்
மல்லிகைப்பூக்கள்

பொங்கல் பண்டிகை- தோவாளை பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை கிடுகிடு உயர்வு

Published On 2021-01-13 07:38 GMT   |   Update On 2021-01-13 07:38 GMT
பொங்கல் பண்டிகையையொட்டி தோவாளை பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை உயர்ந்துள்ளது.
நாகர்கோவில்:

தோவாளை பூ மார்க்கெட்டிற்கு ஆரல்வாய்மொழி, தோவாளை பகுதிகளில் இருந்தும் நெல்லை மாவட்டம் ஆவரைகுளம், பழவூர், சிதம்பரபுரம் பகுதிகளில் இருந்தும் பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.

இதுபோல மதுரை, பெங்களூரு, சேலத்தில் இருந்தும் பூக்கள் விற்பனைக்கு வருகிறது. கடந்த சில நாட்களாக பிச்சி, மல்லிகைப்பூக்களின் வரத்து குறைவாகவே இருந்து வருகிறது. இதனால் பூக்களின் விலை உயர்ந்து காணப்படுகிறது. பொங்கல் பண்டிகையையொட்டி தோவாளை பூ மார்க்கெட் இன்று காலை களை கட்டி இருந்தது.

பூக்கள் விற்பனைக்கு அதிகளவு குவித்து வைக்கப்பட்டிருந்தது. பிச்சி, மல்லிகைப் பூக்கள் இன்றும் குறைவான அளவே விற்பனைக்கு வந்திருந்தது. வியாபாரிகள் பூக்களை போட்டி போட்டுக்கொண்டு ஏலம் எடுத்தனர். இதனால் பூக்களின் விலை உயர்ந்தது.

மல்லிகைப்பூ கிலோ நேற்று ரூ.1,500-க்கு விற்கப்பட்டது. இன்று ரூ.2 ஆயிரமாக உயர்ந்தது. இதேபோல் பிச்சிப்பூ ரூ.1,100-ல் இருந்து ரூ.1,500 ஆக உயர்ந்தது. கேந்திப்பூ ரூ.70, சேலம் அரளி ரூ.250, ரோஜா ரூ.220, சம்பங்கி ரூ.125, கொழுந்து ரூ.125, வாடாமல்லி ரூ.100, கோழிப்பூ ரூ.50-க்கும் விற்கப்பட்டது.

பூக்கள் விலை உயர்வு குறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில், கடுமையான பனிப்பொழிவின் காரணமாக பூக்களின் உற்பத்தி குறைவாக இருந்தது. இந்த நிலையில் தற்போது பெய்து வரும் மழையின் காரணமாகவும் பூக்கள் உற்பத்தி அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தான் பூக்களின் விலை உயர்ந்துள்ளது. தற்போது பொங்கல் பண்டிகையையொட்டி பூக்கள் தேவை அதிகரித்துள்ளது. தை மாதத்தில் திருமண நிகழ்ச்சிகளும் வருவதால் பூக்களின் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது என்றார்.

Tags:    

Similar News