செய்திகள்
வாக்காளர் பட்டியல்

உள்ளாட்சி தேர்தலுக்காக வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி மும்முரம்

Published On 2021-08-04 06:34 GMT   |   Update On 2021-08-04 08:14 GMT
செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்தம் 8 ஒன்றியங்கள் உள்ளன. இங்கு 154 ஒன்றிய கவுன்சிலர்கள், 16 மாவட்ட கவுன்சிலர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
சென்னை:

தமிழகத்தில் வருகிற செப்டம்பர் மாதம் 15-ந் தேதிக்குள் ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

இதையடுத்து புதிதாக பிரிக்கப்பட்ட மற்றும் அதனுடன் இணைந்திருந்த காஞ்சிபுரம் செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தென்காசி, திருநெல்வேலி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய 9 மாவட்டங்களில் விரைவில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.

உள்ளாட்சி தேர்தலை சந்திக்க அரசியல் கட்சி தலைவர்களும், தொண்டர்களும் தயாராகி வருகிறார்கள்.



செங்கல்பட்டு மாவட்டத்தில் 359 ஊராட்சிகளுக்கு
உள்ளாட்சி தேர்தல்
நடைபெற உள்ளது. இதற்காக சட்டசபை தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் அடிப்படையில் ஊராட்சி அளவில் வார்டு வாரியாக வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்தம் 8 ஒன்றியங்கள் உள்ளன. இங்கு 154 ஒன்றிய கவுன்சிலர்கள், 16 மாவட்ட கவுன்சிலர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். மேலும் 159 கிராம ஊராட்சி தலைவர்கள் மற்றும் 2,679 வார்டு உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

இந்த தேர்தலில் வாக்காளர்கள் ஒவ்வொருவரும் தலா 4 வாக்குகளை அளிக்க வேண்டும். ஊராட்சி உறுப்பினர், ஊராட்சி தலைவர், ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் ஆகிய 4 பதவிகளுக்கு வாக்களிக்க வேண்டும். ஊரக உள்ளாட்சி தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் பயன்படுத்த வாய்ப்பு இல்லை. வாக்குச்சீட்டு முறைப்படியே தேர்தல் நடத்தப்பட உள்ளது.

இதுதொடர்பாக ஊரக வளர்ச்சித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் தேர்தல் நடத்துவதற்காக மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது.

தேர்தல் நடத்தும் அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போது நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்காளர் பட்டியலை கொண்டு முதல்கட்டமாக ஊரக பகுதிகளில் வார்டு வாரியாக வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி நடைபெறுகிறது.

இந்த பணிகள் ஓரிரு நாளில் முடிவடையும். அதன் பிறகு வாக்காளர் பட்டியல் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படும். வாக்குச்சாவடி பட்டியல் தயாரித்து அரசியல் கட்சிகளுக்கு விரைவில் வழங்கப்படும். கொரோனா தொற்று காலம் என்பதால் 1000 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி அமைக்கப்பட உள்ளது.

புதிதாக தயாரிக்கப்பட்ட வாக்காளர் பட்டியல் கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படும். அதில் திருத்தங்கள் இருந்தால் சரி செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.




Tags:    

Similar News