ஆன்மிகம்
மன்னார்குடி ராஜகோபாலசாமி

மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவிலில் வெண்ணெய் தாழி உற்சவம்

Published On 2021-03-20 07:45 GMT   |   Update On 2021-03-20 07:45 GMT
மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவிலில் வெண்ணெய் தாழி உற்சவம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பிரசித்தி பெற்ற ராஜகோபாலசாமி கோவில் உள்ளது. புகழ்பெற்ற வைணவ திருத்தலமான இந்த கோவிலில் பெருமாளுக்கு ஆண்டு முழுவதும் உற்சவம் நடக்கிறது. இதில் பங்குனி மாதம் நடைபெறும் ஒருமாத திருவிழா இந்த கோவிலின் முக்கியமான திருவிழாவாகும். கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவிலில் பங்குனி திருவிழா ரத்து செய்யப்பட்டது.

இந்த ஆண்டு பங்குனி திருவிழா கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 2-வது நாள் புன்னைவாகனம், 3-வது நாள் வெள்ளிஹம்சவாகனம், 4-வது நாள் தஙககோவர்த்தனகிரி, 5-வது நாள் பஞ்சமுக அனுமார் வாகனம், 6-ம் நாள் கண்டபேரண்டபட்சி வாகனம், 7-வது நாள் வண்ண புஷ்ப பல்லக்கு ஆகியவற்றில் ராஜகோபாலசாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

15-வது நாள் கோரதத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு ராஜகோபாலசாமி காட்சி அளித்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வெண்ணெய்தாழி உற்சவம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி நேற்று காலை நவநீத சேவையில் ராஜகோபாலன் பல்லக்கில் கோவிலிருந்து புறப்பட்டு 4 வீதிகளையும் வலம் வந்து பெரியகடைத்தெரு வழியாக சென்று காந்திரோட்டில் உள்ள வெண்ணெய்தாழி மண்டபத்தில் எழுந்தருளினார். ராஜகோபாலன் வீதியுலா சென்ற வழியெங்கும் பக்தர்கள் வெள்ளமாக திரண்டு நின்று ராஜகோபாலசாமி மீது வெண்ணெய்யை வீசி வழிபட்டனர். மாலை செட்டி அலங்காரத்தில் பக்தர்களுக்கு ராஜகோபாலசாமி அருள்பாலித்தார். இரவு தங்க குதிரை வாகனத்தில் ராஜ அலங்காரத்தில் செட்டிதெருவில் வீதி உலாவந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் மன்னார்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கனக்கான பக்தர்கள், கலந்து கொண்டு வீதியின் 2 புறமும் திரண்டு நின்று ராஜகோபாலனை வழிபட்டனர்.

இன்று(சனிக்கிழமை) தேரோட்டம் நடைபெறுகிறது. பங்குனி உற்சவத்தின் நிறைவு நிகழ்ச்சியாக கோவிலுக்கு அருகில் உள்ள கிருஷ்ண தீர்த்தத்தில் தெப்பத்திருவிழா அடுத்த மாதம்( ஏப்ரல்) 2-ந் தேதி நடைபெறுகிறது. வெண்ணெய்தாழி விழாவையொட்டி மன்னார்குடி மட்டுமின்றி அதன் சுற்றுவட்டார பகுதி மக்கள் மற்றும் வெளியூர்களிலிருந்து வந்த பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் மன்னார்குடியில் கூடியதால் மன்னார்குடி நகரம் நேற்று மக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிந்தது.
Tags:    

Similar News