செய்திகள்
டி.கே.சிவக்குமார்

சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும்: டி.கே.சிவக்குமார்

Published On 2021-06-09 03:05 GMT   |   Update On 2021-06-09 03:05 GMT
கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தும் பணியில் அனைத்து தலைவர்களும் ஒன்று இணைந்து பணியாற்றி வருகிறோம். நாங்கள் ஒற்றுமையாக சேர்ந்து இருப்பது தொடக்கம் தான்.
பெங்களூரு :

கர்நாடக சட்டசபையில் காலியாக இருந்த மஸ்கி தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற பசன கவுடா துருவிஹல் எம்.எல்.ஏ.வுக்கு பாராட்டு விழா பெங்களூருவில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கலந்து கொண்டு பேசியதாவது:-

கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தும் பணியில் அனைத்து தலைவர்களும் ஒன்று இணைந்து பணியாற்றி வருகிறோம். நாங்கள் ஒற்றுமையாக சேர்ந்து இருப்பது தொடக்கம் தான். ஒற்றுமையாக ஆலோசிப்பது கட்சியை மேலும் பலப்படுத்தும். அனைவரும் இணைந்து பணியாற்றினால் வெற்றி பெற முடியும்.

வருகிற 2023-ம் ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும். ஒருவரால் வெற்றி பெற முடியாது. அனைவரும் இணைந்து பணியாற்றினால் வெற்றி பெற முடியும். கடுமையான உழைப்புக்கு நிச்சயம் பலன் கிடைக்கும்.

காங்கிரசில் அனைவருக்கும் உதவி செய்வேன். யாரும் தனிமையில் இருப்பதாக உணர தேவை இல்லை. ஆனால் கட்சியின் முடிவுகளை மதிக்க வேண்டும். கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும்.

ஒழுக்கத்தை மீறி நடந்து கொள்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மஸ்கியில் காங்கிரஸ் பெற்ற வெற்றி, டெல்லி வரை சென்றுள்ளது. பெலகாவி மக்களவை தொகுதியை குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தவறவிட்டோம். பசவகல்யாண் தொகுதியில் காங்கிரசுக்கு ஏற்பட்ட பின்னடைவு குறித்து நாங்கள் ஆலோசித்து வருகிறோம். பா.ஜனதா ஆட்சியின் மோசமான செயல்பாடுகளால் மக்கள் வெறுப்பில் உள்ளனர்.

கொரோனா நெருக்கடி காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவி செய்ய 224 தொகுதிகளிலும் குழுக்களை அமைத்துள்ளோம். மாவட்ட அளவிலும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் பேசினார்.

Tags:    

Similar News