ஆன்மிகம்
கள்ளழகர்

கள்ளழகர் கோவில் நூபுர கங்கையில் தைலக்காப்பு திருவிழா 16-ந் தேதி நடக்கிறது

Published On 2021-11-13 08:45 GMT   |   Update On 2021-11-13 08:45 GMT
இந்த உற்சவங்கள் அனைத்தும் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைக்கு உட்பட்டு உரிய பாதுகாப்புடன் அரசு வழி காட்டுதல்படி பக்தர்கள் அனுமதியின்றி நடைபெறும்.
அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் தைலக்காப்பு திருவிழா 3 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த வருடம் நாளை (14- ந் தேதி) 1-ம் திருவிழாவாக தொடங்குகிறது. அன்று மாலையில் 6.15 மணிக்குமேல் 7.15 மணிக்குள் மிதுனம் லக்கினத்தில் சுந்தர ராச பெருமாளுக்கு தைலக்காப்பு நடத்தப்படும்.

தொடர்ந்து நாளை மறுநாள் 15-ந் தேதி 2-ம் திருநாள். இதில் கோவில் உள்பிரகாரத்தில் இருக்கும் மேட்டுகிருஷ்ணன் சன்னதியில் சீராப்தி நாதன் சேவை நிகழ்ச்சி நடைபெறும்.

16-ந் தேதி 3-ம் திருநாள் அன்று காலையில் 8.30 மணிக்கு மேல் 9 மணிக்குள் மகர லக்கினத்தில் இருப்பிடத்தில் இருந்து சிறப்பு அலங்காரத்தில் பல்லக்கில் எழுந்தருளி சுந்தர ராச பெருமாள் என்ற கள்ளழகர் மலை பாதை வழியாக செல்கிறார்.

அழகர்மலை உச்சியில் உள்ள நூபுர கங்கை ராக்காயி அம்மன் கோவிலில் காலை 11 மணிக்கு எழுந்தருள்கிறார். தொடர்ந்து 12 மணிக்குள் கும்ப லக்கினத்தில் கள்ளழகர் பெருமாளுக்கு திருத்தைலம் சாத்தப்பட்டு அங்குள்ள நூபுர கங்கையில் தீர்த்தவாரி நடைபெறும்.

மேலும் இந்த உற்சவங்கள் அனைத்தும் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைக்கு உட்பட்டு உரிய பாதுகாப்புடன் அரசு வழி காட்டுதல்படி பக்தர்கள் அனுமதியின்றி நடைபெறும். தவிர தீர்த்தவாரி நிகழ்வு முடிந்து பிற்பகல் 1 மணி அளவில் கள்ளழகர் பெருமாளை தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். தொடர்ந்து வந்த வழியாகவே சென்று சாமி கோவிலுக்குள் இருப்பிடம் சேருகிறார்.

இந்த திருவிழா நிகழ்ச்சிகளை யூ டியூப், முகநூல் மூலம் பொதுமக்கள் வீட்டில் இருந்து பார்த்து தரிசனம் செய்யலாம். இந்த திருவிழா ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் அனிதா மற்றும் கண்காணிப்பாளர்கள், உள்துறை அலுவலர்கள், கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.
Tags:    

Similar News