ஆன்மிகம்
பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்து வந்த அஷ்டமி சப்பரம்

10 மாதங்களுக்கு பின் விழாக்கோலம்: பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்து வந்த அஷ்டமி சப்பரம்

Published On 2021-01-06 08:07 GMT   |   Update On 2021-01-06 08:07 GMT
10 மாதங்களுக்கு பின் மார்கழி தேய்பிறை அஷ்டமியான இன்று மீனாட்சி- சுந்தரேசுவரர் அஷ்டமி சப்பர திருவிழா நடைபெற்றது. அதிகாலையில் மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி- அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன.
மதுரை 

உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆண்டின் 12 மாதங்களிலும் திருவிழா நடைபெறும்.

குறிப்பாக சித்திரை மாதத்தில் நடக்கும் மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம், தேரோட்டம் ஆகியவை பிரசித்திப் பெற்றவை.

இந்த திருவிழாக்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள். ஆனால் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக மீனாட்சி திருக்கல்யாணம் பக்தர்கள் இன்றி எளிமையாக நடந்தது. தேரோட்டம் ரத்து செய்யப்பட்டது.

விழாக்களுக்கு பெயர் பெற்ற மதுரையில் கொரோனா பரவல் ஊரடங்கு தடை காரணமாக எந்த கோவில் திருவிழாக்களும் பொது வெளியில் நடைபெற வில்லை. இதனால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

இந்த நிலையில் தற்போது தமிழக அரசு ஊரடங்கு தளர்வுகளை அறிவித்துள்ள காரணத்தால் மதுரையில் மீண்டும் கோவில் திருவிழாக்கள் களைகட்ட தொடங்கியுள்ளது.

இந்த நிலையில் மார்கழி மாதம் நடைபெறும் மீனாட்சி அம்மன் கோவில் அஷ்டமி சப்பர திருவிழாவை வழக்கம் போல் 4 வெளி வீதிகளில் உலா வருவது போல் நடத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். கடந்த மாதம் மாநிலத்தில் முக்கிய கோவில்களில் நடந்த நிகழ்ச்சிகளின் வழிகாட்டுதல்படி மீனாட்சி- சுந்தரேசுவரர் அஷ்டமி சப்பர திருவிழா வழக்கம்போல் விமரிசையாக நடத்தப்படும் என கோவில் இணை ஆணையாளர் செல்லத்துரை தெரிவித்தார். இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து மார்கழி தேய்பிறை அஷ்டமியான இன்று மீனாட்சி- சுந்தரேசுவரர் அஷ்டமி சப்பர திருவிழா நடைபெற்றது. அதிகாலையில் மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி- அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன.

இதனைத் தொடர்ந்து சப்பரத்தில் எழுந்தருளும் சுந்ரேசுவரர்-பிரியாவிடை மற்றும் மீனாட்சி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிவாச்சாரியார்கள் பூஜை செய்தனர். அதிகாலை 5 மணிக்கு சுவாமி, பிரியாவிடையுடன் ஒரு சப்பரத்திலும், மீனாட்சி அம்மன் மற்றொரு சப்பரத்திலும் எழுந்தருளினர்.

சுந்தரேசுவரர் எழுந்தருளிய சப்பரம் முன்னே செல்ல, அதனைத் தொடர்ந்து மீனாட்சி அம்மன் சப்பரம் வந்தது. மீனாட்சி அம்மன் சப்பரத்தை பெண்கள் மட்டுமே வடம்பிடித்து இழுத்தனர்.

10 மாதங்களுக்கு பின் மீனாட்சி அம்மன் கோவில் திருவிழா பொது வெளியில் நடத்தப்பட்டதால் மதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் 4 வெளி வீதிகளில் திரண்டிருந்தனர்.

சுந்தரேசுவரர்-அம்மன் சப்பரம் வந்தபோது அவர்கள் பக்தி கோ‌ஷம் முழங்க தரிசனம் செய்தனர்.

எல்லா உயிர்களுக்கும் சிவபெருமான் படியளக்கும் நிகழ்வை குறிப்பிடும் வகையில் அஷ்டமி சப்பர விழா நடைபெறுகிறது. நினைவுபடுத்தும் வகையில் சப்பரத்தில் இருந்த சிவாச்சாரியார்கள் சப்பரம் சென்ற வழிகளில் அரிசியை தூவியபடி சென்றனர். இதனை பெண்கள் ஆர்வத்துடன் எடுத்து சென்றனர்.

கோவிலில் இருந்து புறப்பட்ட சப்பரம் வடக்கு நோக்கி யானைக்கல், வடக்கு வெளி வீதி, கீழ வெளி வீதி, தெற்கு வெளி வீதி, திருப்பரங்குன்றம் ரோடு வழியாக மேல வெளி வீதி, குட்ஷெட் தெரு, நாயக்கர் புதுத்தெரு, வக்கீல் புதுத்தெரு, கீழ மாரட் வீதி, காமராஜர் சாலை, விளக்குத்தூண் வழியாக கீழ மாசி வீதி வந்து காலை 10 மணி அளவில் தேரடி வந்தடைந்தது.

இதையொட்டி நகரில் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. 500-க் கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Tags:    

Similar News