ஆன்மிகம்
உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் தாயார் திருவடி சேவை

உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் தாயார் திருவடி சேவை

Published On 2020-09-22 05:49 GMT   |   Update On 2020-09-22 05:49 GMT
ஸ்ரீரங்கம் ரெங்கநாதசுவாமி கோவிலின் உபகோவிலான திருச்சி உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் ஒருமுறை மட்டுமே நடைபெறும் தாயார் திருவடி சேவை வைபவம் நடைபெற்றது.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதசுவாமி கோவிலின் உபகோவிலான திருச்சி உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் விசேஷமானதாக கருதப்படும் நவராத்திரி உற்சவம் கடந்த 17-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. தினமும் மாலை தாயார் மூலஸ்தானத்திலிருந்து நவராத்திரி மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

அந்தவகையில் நவராத்திரி 5-ம் நாளான நேற்று வருடத்துக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் தாயார் திருவடி சேவை வைபவம் நடைபெற்றது. நேற்று மாலை கமலவல்லி தாயார் (உற்சவர்) மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு மேளதாளங்கள் முழங்க உள் வீதிகளில் அரையர் சேவையினை கேட்டபடி வலம் வந்து, கொலு மண்டபத்தில் பொற்பாதங்கள் தெரிய எழுந்தருளினார். இந்த வழிபாட்டில் தாயார் கிளி மாலை மற்றும் சவரிகொண்டை சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கொலு மண்டபத்தில் தாயாருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

தாயாரின் திருவடியை பக்தர்கள் சேவித்தால் செல்வம் பெருகும், குடும்பத்தில் ஒற்றுமை ஓங்கும் என்பது ஐதீகம். இதையொட்டி உறையூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் முக கவசம் அணிந்தபடி கோவிலுக்கு வந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து கமலவல்லி நாச்சியார் தாயார் திருவடி சேவையை தரிசித்தனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. முன்னதாக கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு உடல் வெப்பம் பரிசோதிக்கப்பட்டு, பின்னர் அனுமதிக்கப்பட்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை அறநிலையத் துறையினர் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.
Tags:    

Similar News