செய்திகள்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

ரூ.565 கோடி செலவில் 100 ஏரிகளை நிரப்பும் திட்டம்- எடப்பாடி பழனிசாமி நாளை தொடங்கி வைக்கிறார்

Published On 2021-02-25 06:39 GMT   |   Update On 2021-02-25 06:39 GMT
மேட்டூர் அணை உபரி நீரை கொண்டு ரூ.565 கோடி செலவில் 100 ஏரிகளை நிரப்பும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை தொடங்கி வைக்கிறார்.
சேலம்:

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை சென்னையில் இருந்து கோவைக்கு காரில் வருகிறார். கோவைக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியை, எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசுகிறார்.

தொடர்ந்து காரில் சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள வீட்டிற்கு வருகிறார். அங்கு அவருக்கு மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் ஜி. வெங்கடாசலம் எம்எல்ஏ தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.

மேட்டூர் அணையில் இருந்து வெளியேறும் உபரி நீரை மேட்டூர், ஓமலூர், சங்ககிரி, எடப்பாடி ஆகிய தொகுதிகளில் உள்ள 100 வறண்ட ஏரிகளுக்கு கொண்டு செல்லும் திட்டப்பணிகள் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. ரூ.565 கோடி செலவில் நிறைவேற்றப்பட்ட இந்த திட்டப்பணிகள் தற்போது நிறைவு பெற்றுள்ளது.

இதன் தொடக்க விழா நாளை (வெள்ளிக்கிழமை) காலை 6.30 மணிக்கு நடக்கிறது. இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று இந்த திட்டத்தை தொடங்கி வைத்து மக்களுக்கு அர்ப்பணிக்கிறார்.

இந்த நிகழ்ச்சியில் அரசியல் கட்சியினர், அதிகாரிகள், பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்கிறார்கள். இந்த திட்டத்தின் மூலம் அந்த பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்பதால் குடிநீருக்கும், விவசாயத்திற்கும் போதுமான தண்ணீர் கிடைக்கும் என்பதால் அந்த பகுதியினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

காலை 9 மணியளவில் சேலம் காமலாபுரம் விமான நிலையம் வரும் அவர் விமானத்தில் சென்னைக்கு புறப்பட்டு செல்கிறார். இதையொட்டி அவர் செல்லும் பாதைகளில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
Tags:    

Similar News