செய்திகள்
முல்லை பெரியாறு அணை

பெரியாறு அணை நீர்மட்டம் 2 நாளில் 4 அடி உயர்வு

Published On 2021-10-18 03:56 GMT   |   Update On 2021-10-18 03:56 GMT
இடுக்கி மாவட்டத்தில் விடாது கொட்டி வரும் கனமழையினால் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் கடந்த 2 நாளில் 4 அடி உயர்ந்துள்ளது.
கூடலூர்:

கேரளாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இடுக்கி மாவட்டத்தில் மஞ்சள் நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. முல்லைப்பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த 3 நாட்களாக பெய்த கனமழையால் அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

நேற்று முன்தினம் அணையின் நீர் மட்டம் 128.90 அடியாக இருந்தது. நீர் வரத்து 1435 கன அடியாக இருந்தது. இன்று 4 அடி வரை உயர்ந்து நீர் மட்டம் 133 அடியாக உள்ளது. நீர் வரத்தும் 5926 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து 1300 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நீர் இருப்பு 5399 மி.கன அடியாக உள்ளது.

152 அடி உயரமுள்ள முல்லைப் பெரியாறு அணையில் தற்போது வரை உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி 142 அடி வரை மட்டுமே தண்ணீர் தேக்கப்படுகிறது. கோர்ட்டு உத்தரவுக்கு பிறகு இதுவரை 4 முறை அணையின் நீர் மட்டம் அதன் உச்சபட்ச அளவான 142 அடி வரை தேக்கப்பட்டுள்ளது.

தற்போது பெய்து வரும் மழை நீடிக்கும் பட்சத்தில் இன்னும் ஓரிரு நாளில் அணையின் நீர் மட்டம் 142 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தென்மேற்கு பருவமழை சமயத்தில் அணையின் நீர் மட்டம் 142 அடி வரை நெருங்கியது.

வைகை அணையின் நீர் மட்டம் 55.87 அடியாக உள்ளது. வரத்து 1520 கன அடி. திறப்பு 1119 கன அடி. இருப்பு 2860 மி.கன அடி. மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 54.40 அடி. வரத்து 53 கன அடி. திறப்பு 100 கன அடி. இருப்பு 43.14 மி.கன அடி. சோத்துப்பாறை அணை நீர் மட்டம் 126.28 அடி. வரத்து மற்றும் திறப்பு 30 கன அடி. இருப்பு 100 மி.கன அடி.

தொடர் மழை காரணமாக தேனி மாவட்டத்தில் சுருளி, கும்பக்கரை உள்ளிட்ட அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆனால் இங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை தொடர்வதால் மக்கள் ஏமாற்றத்துடன் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இப்பகுதியில் சுற்றுலா தொழிலை நம்பியுள்ளவர்களும் விரைவில் அருவியை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெரியாறு 46.8, தேக்கடி 16 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.
Tags:    

Similar News