செய்திகள்
ஜிகே வாசன்

மத்திய குழுவினர் நிவர் புயல் பாதிப்புக்கு முழு நிவாரணம் கிடைக்க உதவ வேண்டும்- ஜிகே வாசன்

Published On 2020-11-30 06:44 GMT   |   Update On 2020-11-30 06:44 GMT
தமிழகம் வரும் மத்திய குழுவினர் நிவர் புயல் பாதிப்புக்கு முழு நிவாரணம் கிடைக்க உதவ வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் கூறியுள்ளார்.

சென்னை:

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறி இருப்பதா வது:-

நிவர் புயலால் ஏற்பட்ட மழை, காற்றினால் கடலூர், விழுப்புரம், வேலூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மற்றும் கள்ளக்குறிச்சி போன்ற பகுதிகளில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக வீடுகள் இடிந்தும், சேதமுற்றும், பயிர்கள் தண்ணீரில் மூழ்கியும், சாய்ந்தும் காணப்படுகிறது.

குறிப்பாக விவசாயிகளின் நெல், கரும்பு, வாழை, தென்னை சேதமுற்றும், கால்நடைகள் பாதிக்கப்பட்டும் இழப்புகள் ஏற்பட்டுள்ளது. மேலும் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் பயிரிடப்பட்ட விவசாய பயிர்கள் வெள்ளத்தால் நாசமாகி இருக்கிறது. தமிழக அரசு புயல் சேத மதிப்பீடுகளை வேளாண் மற்றும் தோட்டக் கலைத் துறையின் மூலம் ஆய்வு செய்து கணக்கிட்டு வருகிறது.

இந்தநிலையில் நிவர் புயலால் பாதித்த பகுதிகளை பார்வையிட மத்திய குழுவினர் தமிழகம் வருகின்றனர். 7 பேர் கொண்ட இக்குழுவில் உள்ள மத்திய அரசின் பல்வேறு முக்கியத் துறையைச் சேர்ந்த செயலாளர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்கு முன்பும், பார்வையிட்ட பின்பும் தமிழக அரசிடம் ஆலோசனை செய்கிறார்கள்.

மேலும் மத்திய குழு பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்த பிறகு ஓர் அறிக்கையை தயார் செய்து மத்திய அரசிடம் கொடுக்கும்.

இந்த அறிக்கையானது தமிழகத்தில் நிவர் புயலால் வீடுகளை இழந்தோருக்கும் கால்நடைகளை இழந்தோருக்கும், பயிர்கள் சேதமடைந்ததற்கும், அனைத்து விதமான பாதிப்புகளுக்கும் உரிய நிவாரணம் கிடைக்கும் வகையில் அமைய வேண்டும்.

தமிழக அரசு நிவர் புயலால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்க மத்திய அரசிடம் நிதி பெற வைக்கும் கோரிக்கைக்கு ஏற்ப முழு நிவாரண நிதியையும் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News