வழிபாடு
பழனி முருகன் கோவிலில் 3 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்

பழனி முருகன் கோவிலில் 3 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்

Published On 2021-12-13 02:53 GMT   |   Update On 2021-12-13 02:53 GMT
பழனி முருகன் கோவிலில் வார விடுமுறையையொட்டி பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. 3 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலுக்கு திருவிழாக்கள் மட்டுமின்றி தினமும் வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். கார்த்திகை மாதம் என்பதால், தற்போது வழக்கத்தைவிட பக்தர்கள் வருகை அதிகமாக உள்ளது.

குறிப்பாக சபரிமலை சீசன் என்பதால் ஆந்திரா, கேரளா, கர்நாடகா என வெளிமாநிலங்களில் இருந்தும், வெளியூர்களில் இருந்தும் ஏராளமான அய்யப்ப பக்தர்கள் பழனிக்கு வந்து முருகப்பெருமானை தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர்.

இந்நிலையில் நேற்று வார விடுமுறை என்பதால் பழனியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அதிகாலை முதலே பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர்.

இதனால் கிரிவீதிகள், சன்னதிவீதி, பாதவிநாயகர் கோவில், திருஆவினன்குடி கோவில் ஆகிய இடங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கூட்டம் காரணமாக மலைக்கோவில் செல்வதற்காக ரோப்கார் நிலையம், மின்இழுவை ரெயில்நிலையத்தில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

இதேபோல் பொது, கட்டணம் உள்ளிட்ட தரிசன வழிகளிலும், மலைக்கோவில் வெளிப்பிரகாரத்திலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். எனவே 3 மணி நேரம் காத்திருந்து முருகப்பெருமானை பக்தர்கள் தரிசனம் செய்தனர். தரிசனம் முடித்த பக்தர்கள் அடிவாரம் பகுதியில் உள்ள ‘செல்பி ஸ்பாட்' பகுதியில் குடும்பத்துடன் நின்று புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தனர்.

பழனி அடிவார பகுதியில் கூட்டம் அதிகமாக இருந்ததால் திருட்டு, ஜேப்படி உள்ளிட்டவற்றை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். கடந்த சில நாட்களாக பழனி பகுதியில் மழை பெய்த நிலையில் நேற்றும் அதிகாலையில் சாரல் மழை பெய்தது. பின்னர் பகல் முழுவதும் மேகமூட்டம் காணப்பட்டதால் வெயிலின் தாக்கம் தெரியவில்லை.
Tags:    

Similar News