செய்திகள்
சாலையில் முறிந்து விழுந்த மரத்தை தீயணைப்பு வீரர்கள் அப்புறப்படுத்திய காட்சி

திண்டுக்கல் மாவட்டத்தில் பரவலாக மழை

Published On 2019-07-10 06:02 GMT   |   Update On 2019-07-10 06:02 GMT
திண்டுக்கல் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. கொடைக்கானலில் மரம் முறிந்து விழுந்ததால் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

கொடைக்கானல்:

தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு கோடை மழை ஏமாற்றியது. இதனால் நீர்நிலைகள் வறண்டு விவசாயம் மட்டுமின்றி குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டது.

திண்டுக்கல் மாவட்டத்தில் கோடைகாலம் முடிந்த பின்பும் வெயிலின் தாக்கம் தொடர்ந்து கொண்டே இருந்ததால் பொது மக்கள் கடும் சிரமத்திற் குள்ளானார்கள். எனவே மழையை எதிர்பார்த்திருந்தனர். நேற்று பகல் பொழுதில் வெயில் சுட்டெரித்த நிலையில் மாலையில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து சாரல் மழை பெய்தது.

திண்டுக்கல், செம்பட்டி, வத்தலக்குண்டு, சின்னாள பட்டி, நிலக்கோட்டை, ஒட்டன்சத்திரம், பழனி, அய்யலூர், வேடசந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கொடைக்கானல் கீழ்மலை பகுதியான தாண்டிக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கன மழை பெய்தது.

இதனால் சாலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. கொடைக்கானல் நகர் பகுதியில் சுமார் 1 மணிநேரம் மிதமான மழை பெய்தது. மேல்மலை கிராமங்கள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை தொடர்ந்து பெய்தது. இதனால் நீர்நிலைகளின் நீர்மட்டம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பூலத்தூர், கும்பரையூர், நண்டாங்கரை பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. வத்தலக்குண்டு- கொடைக்கானல் சாலையில் திடீரென மரம் முறிந்து விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தீயணைப்புத்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் வனத்துறையினர் மரத்தை அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர்.

Tags:    

Similar News