செய்திகள்
மத்திய அரசு

கொரோனாவால் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு ரூ.50 ஆயிரம்- மத்திய அரசு உத்தரவு

Published On 2021-09-28 08:14 GMT   |   Update On 2021-09-28 09:47 GMT
கொரோனா நிவாரண நிதி மாநில அரசுகளின் பணத்தில் இருந்து வழங்க வேண்டும் என்பதற்கு கேரளா உள்ளிட்ட சில மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த பணத்தை மத்திய அரசே வழங்க வேண்டும் என்று அந்த மாநிலங்கள் வற்புறுத்தி இருக்கின்றன.

புதுடெல்லி:

இந்தியாவில் இதுவரை கொரோனாவுக்கு 4 லட்சத்து 47 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர்.

கொரோனாவால் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன.

இதை விசாரித்த நீதிபதிகள், மத்திய அரசு நிதி உதவி வழங்குவதற்கான அறிவிப்பை வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதில் மத்திய அரசு தயக்கம் காட்டியதை அடுத்து சுப்ரீம் கோர்ட்டு ஒரு உத்தரவு பிறப்பித்தது.

அதில், கொரோனாவால் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. இதையடுத்து இந்த பணத்தை மாநில அரசுகள் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து வழங்க செய்வது என்று முடிவு எடுக்கப்பட்டது.

 


இதன்படி மத்திய அரசு உள்துறையின் துணைச் செயலாளர் ஆசீஷ்குமார் சிங் அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், அனைத்து மாநில அரசுகளும் தங்கள் மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து கொரோனாவில் உயிரிழந்த குடும்பங்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிதி உதவி வழங்க வேண்டும்.

தொற்று பாதிப்பு தொடங்கிய காலத்தில் இருந்து இறந்தவர்கள் அனைவரின் குடும்பங்களுக்கும் நிவாரணம் வழங்கப்பட வேண்டும். அடுத்த உத்தரவு வரும் வரை இந்த உதவித்தொகை அளிக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனாவை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவித்தது. எனவே அதிலிருந்து இறந்தவர்கள் அனைவருக்கும் நிதி உதவி கிடைக்கும்.

ஆனால் கொரோனா நிவாரண நிதி மாநில அரசுகளின் பணத்தில் இருந்து வழங்க வேண்டும் என்பதற்கு கேரளா உள்ளிட்ட சில மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த பணத்தை மத்திய அரசே வழங்க வேண்டும் என்று அந்த மாநிலங்கள் வற்புறுத்தி இருக்கின்றன.

இதையும் படியுங்கள்... தடுப்பூசி செலுத்துவதில் 13 மாவட்டங்களில் திருப்தி இல்லை

Tags:    

Similar News