செய்திகள்
மதுபாட்டில்கள் கடத்தியதாக கைது செய்யப்பட்ட வாலிபர்களை காணலாம்

புதுவையில் இருந்து தமிழகத்துக்கு மதுபாட்டில்கள் கடத்திய 3 வாலிபர்கள் கைது

Published On 2021-10-05 02:42 GMT   |   Update On 2021-10-05 02:42 GMT
புதுவையில் இருந்து தமிழகத்துக்கு மதுபாட்டில்கள் கடத்திய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி:

தமிழகத்தில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்பட 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நாளை (புதன் கிழமை) மற்றும் வருகிற 9-ந் தேதி என 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் வாக்காளர்களை கவருவதற்காக புதுவையில் இருந்து குறைந்த விலைக்கு மதுபாட்டில்கள் வாங்கி தமிழக பகுதிக்கு கடத்தப்படுவதாக புகார் வந்தது.

இதனை தடுக்க புதுச்சேரி போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் முதலியார்பேட்டை போலீசார் நேற்று 100 அடி ரோட்டில் ரோந்து மேற்கொண்டனர்.

அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்ற 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த கருணாகரன் (வயது 23), செல்வம் (22) என்பது தெரியவந்தது. அவர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.10,500 மதிப்புள்ள மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதேபோல் கோரிமேடு போலீசார் மேட்டுப்பாளையம் கனரக ஊர்தி முனையம் அருகில் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை வழிமறித்து சோதனை நடத்தியதில், 5 அட்டை பெட்டிகளில் பீர் பாட்டில்கள், ஒரு பெட்டியில் மதுபாட்டில்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக கார் டிரைவர் டி.என்.பாளையத்தை சேர்ந்த கலைச்செல்வன் (வயது 27) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

அவரிடம் விசாரணை நடத்தியதில், வானூர் பூத்துறைக்கு மதுபாட்டில்களை கடத்தி சென்றதாக தெரிவித்தார். இதையடுத்து மதுபாட்டில்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரை போலீசார் பறிமுதல் செய்தனர். மது பாட்டில்கள் கடத்தியதாக கைது செய்யப்பட்ட 3 பேரும் கலால் துறை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
Tags:    

Similar News