செய்திகள்
கோப்புபடம்

உடுமலை நகராட்சி சந்தையில் மேம்பாட்டு பணிகள் தொடங்குவதில் இழுபறி - பொதுமக்கள் பாதிப்பு

Published On 2021-10-23 07:14 GMT   |   Update On 2021-10-23 07:14 GMT
உள்ளூர் வியாபாரிகள் மட்டுமன்றி பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கேரளா மாநிலம் மறையூர், மூணாறு பகுதிகளிலிருந்தும் வியாபாரிகள் வந்து காய்கறிகளை கொள்முதல் செய்கின்றனர்.
உடுமலை:
 
உடுமலை நகராட்சி சந்தை வளாகம் 16.14 ஏக்கரில் அமைந்துள்ளது. 34 கமிஷன் கடைகள் மற்றும் 314 நிரந்தர கடைகள் உள்ளன.

உடுமலை சுற்றுப்பகுதிகளில் விளையும் தக்காளி, தேங்காய், வெங்காயம், முருங்கை, கத்தரி, வெண்டை என தினமும் 700 டன் வரை காய்கறிகள் வரத்து வருகிறது.

உள்ளூர் வியாபாரிகள் மட்டுமன்றி பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கேரளா மாநிலம் மறையூர், மூணாறு பகுதிகளிலிருந்தும் வியாபாரிகள் வந்து காய்கறிகளை கொள்முதல் செய்கின்றனர்.

தினசரி சந்தையில் காய்கறி வாங்க பல ஆயிரக்கணக்கான பொதுமக்களும் வந்து செல்கின்றனர். நகராட்சி சந்தை வளாகத்தில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளான குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்டவற்றை மேற்கொள்ள வேண்டும்.

தரைக்கடைகளில் அமர்ந்து வியாபாரிகள் விற்பனை செய்வதை தவிர்க்கும் வகையில் பழைய கடைகளை புதுப்பிக்கவும் புதிய கடைகள் அமைக்கவும் வேண்டும் என பல ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில் நகராட்சி நூற்றாண்டு விழா சிறப்பு நிதியின் கீழ் ரூ.6.84 கோடி செலவில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டது.

இதன் கீழ் அடிப்படை வசதிகள் மற்றும் தற்போதுள்ள ராஜேந்திரா ரோடு வணிக வளாகத்திற்கு இணையாக சந்தை வளாகத்திற்கும் கிழக்கு பார்த்து 70 கடைகளும் கட்ட திட்டம் வடிவமைக்கப்பட்டது. 

தொடர்ந்து டெண்டர் விடப்பட்டு, பிப்ரவரி மாதம் 25-ந்தேதி வேலை உத்தரவு வழங்கப்பட்டது. இதனையடுத்து பணியை தொடங்குவதற்கான அடிக்கல் நாட்டு விழாவும், திட்டப்பணி குறித்த அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டது. 9 மாதத்திற்குள் பணி முடிக்க ஒப்பந்த காலம் வழங்கப்பட்டது.

பணி முடிப்பதற்கான காலக்கெடு முடிய உள்ள நிலையில் இதுவரை சந்தை மேம்பாட்டு பணி துவங்காமல் இழுபறியாக வருகிறது. இதனால் மழை காலங்களில் சந்தை வளாகம் சேறும், சகதியுமாக மாறி வருவதோடு சாலைகளை ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப்படுகிறது. 

அடிப்படை வசதிகள் இல்லாததால் சந்தைக்கு வரும், விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கின்றனர்.எனவே சந்தை மேம்பாட்டு பணியை உடனடியாக தொடங்கி விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Tags:    

Similar News