ஆன்மிகம்
தர்ப்பணம்

மகாளய அமாவாசை- புரட்டாசி முதல் நாள்: முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு

Published On 2020-09-17 03:14 GMT   |   Update On 2020-09-17 03:14 GMT
இன்று மகாளய அமாவாசை மற்றும் புரட்டாசி முதல் நாள் என்பதால் சென்னையில் உள்ள கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
சென்னை :

இன்று மகாளய அமாவாசை மற்றும் புரட்டாசி முதல் நாள் என்பதால் சென்னையில் உள்ள கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் கோவில்களின் அருகில் பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர்.

மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மற்றும் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் வழிபாடு செய்ய அதிகளவு பக்தர்கள் கூடினர். அதிகாலையில் இருந்து நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் தெப்ப குளத்தில் காலை 6 மணி முதல் பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க குவித்தனர். தர்ப்பணம் கொடுக்கும் ஆவலில் சமூக இடைவெளியை மக்கள் மறந்து விடக்கூடாது என்ற எண்ணத்த்தில் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

அதே போல் மஹாளய அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி மலையில் பக்தர்கள் குவிந்தனர். மேலும் சமூக இடைவெளியை மறந்து நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

இன்று மகாளய அமாவாசையையொட்டி ஸ்ரீரங்கம் அம்மாமண்டபத்தில் பொது மக்கள் கூட தடை உள்ளதால் நேற்றே காவிரியில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து சென்றனர்.

இன்று மகாளய அமாவாசையையொட்டி ராமேசுவரம் கோவிலில் தரிசிக்க அனுமதி அளிக்கப்பட்டாலும், அக்னி தீர்த்த கடலில் புனித நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கடற்கரைக்கு செல்லும் பாதை அடைக்கப்பட்டது. கடற்கரை, நீர் நிலைகளில் தர்ப்பணம் செய்ய தடை நீடிப்பதால் வெறிச்சோடி காணப்படுகிறது.

ராமேசுவரம் கோவிலில் பக்தர்கள் 3 மணி நேரம் முதல் 5 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News