செய்திகள்
எடியூரப்பா

மந்திரிசபை மாற்றம் குறித்து பாஜக மேலிடம் முடிவு எடுக்கும்: எடியூரப்பா

Published On 2020-11-01 01:34 GMT   |   Update On 2020-11-01 01:34 GMT
இடைத்தேர்தல் முடிந்ததும் டெல்லி செல்வதாகவும், மந்திரிசபையை மாற்றியமைப்பது குறித்து பா.ஜனதா மேலிடம் முடிவு எடுக்கும் என்றும் முதல்-மந்திரி எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
பெங்களூரு :

பெங்களூருவில் நேற்று முதல்-மந்திரி எடியூரப்பா நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

மந்திரிசபை விரிவாக்கம் ஏற்கனவே நடந்திருக்க வேண்டும். சில காரணங்களால் மந்திரிசபை விரிவாக்கம் தள்ளிப்போய் உள்ளது. இடைத்தேர்தல் முடிந்ததும் டெல்லிக்கு செல்ல உள்ளேன். கட்சியின் மேலிட தலைவர்களை சந்தித்து பேச உள்ளேன். மந்திரிசபை விரிவாக்கம் குறித்து கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்க உள்ளேன். மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்படுமா?, அல்லது மாற்றி அமைக்கப்படுமா? என்பது குறித்து பா.ஜனதா மேலிடம் தான் முடிவு எடுக்கும். தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், அதுபற்றி அதிகம் பேச விரும்பவில்லை.

இடைத்தேர்தல் முடிந்ததும், அனைத்து விஷயங்கள் தொடர்பாகவும் விரிவாக தெரிவிக்கிறேன். இடைத்தேர்தல் பல்வேறு காரணங்களால் நடைபெறுவது உண்டு. தற்போது நடைபெறும் இடைத்தேர்தல்கள் முற்றிலும் மாறுபட்டது. எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள், ஆளுங்கட்சிக்கு செல்வதால் இடைத்தேர்தல் நடைபெறுவது உண்டு. ஆனால் ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள், எதிர்க்கட்சியாக இருந்த பா.ஜனதாவுக்கு வந்ததால் தற்போது ஆர்.ஆர்.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்கிறது.

இந்த இடைத்தேர்தலில் ஆர்.ஆர்.நகர் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் முனிரத்னா 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். அதாவது ஆர்.ஆர்.நகர் தொகுதியில் பா.ஜனதா வெற்றி உறுதியாகி உள்ளது. எத்தனை ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுகிறார் என்பது பற்றி தான் தெரிந்து கொள்ள வேண்டும். இனிவரும் தேர்தல்களில் பா.ஜனதாவுக்கு பின்னடைவு ஏற்படக்கூடாது. ஒவ்வொரு தேர்தலிலும் பா.ஜனதா வெற்றி பெற்றே தீர வேண்டும். இடைத்தேர்தலில் மட்டும் அல்ல, அடுத்து நடைபெறும் சட்டசபை தேர்தலில் 150 தொகுதிகளில் பா.ஜனதா வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்கும்.

இடைத்தேர்தலில் ஆர்.ஆர்.நகர் தொகுதியில் முனிரத்னா வெற்றி பெற்றதும், அவர் மந்திரியாவது உறுதி. நான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவேன். காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் பா.ஜனதா மீது கூறும் குற்றச்சாட்டுகளை மக்கள் ஒரு போதும் நம்ப மாட்டார்கள். பா.ஜனதா எப்போதும் சாதி அரசியலில் ஈடுபட்டது இல்லை. ஒக்கலிக சமுதாயத்தை சேர்ந்த நிறைய மந்திரிகள், எனது தலைமையிலான மந்திரி சபையில் இடம் பெற்றுள்ளனர். அனைத்து சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கும் மந்திரிசபையில் இடம் அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து சமுதாய மக்களும் சமமானவர்களே.

இடைத்தேர்தல் பிரசாரத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த சந்தர்ப்பத்தில் நான் பிரசாரத்தில் ஈடுபடாமல் இருந்தால், மக்களிடம் தவறான கருத்து சென்று விடும். அதனால் சிரா, ஆர்.ஆர்.நகர் தொகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறேன். 2 தொகுதிகளிலும் பா.ஜனதாவுக்கு மக்கள் முழு ஆதரவு அளித்து வருகின்றனர். தேர்தல் பிரசாரத்தின் போது இதனை நேரில் பார்த்தேன். இடைத்தேர்தலில் 2 தொகுதிகளிலும் பா.ஜனதா வெற்றி பெறுவது உறுதி.

பெங்களூரு நகரில் உள்ள பிரச்சினைகளை தீர்க்க சிறப்பு கவனம் செலுத்தி வருகிறேன். மக்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து தலைமை செயலாளருடன் ஆலோசித்துள்ளேன். இன்னும் 3 மாதங்களுக்குள் எந்த விதமான பிரச்சினைகள் இருந்தாலும், அது சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இன்னும் ஒரு மாதம் பெங்களூரு நகரம் முழுவதும் வலம் வர உள்ளேன். பெங்களூருவின் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் பா.ஜனதா அரசால் எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News