செய்திகள்
மு.க.ஸ்டாலின்

மக்கள் குறை தீர்க்கும் ஆயத்த பணிகளை தொடங்குங்கள்: மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம்

Published On 2021-01-27 08:50 GMT   |   Update On 2021-01-27 08:50 GMT
மக்கள் குறை தீர்க்கும் ஆயத்த பணிகளை தொடங்குங்கள் என்று தொண்டர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளார்.

சென்னை:

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

குடியரசு என்பது மக்களால் மக்களுக்காக மக்களுடைய அரசு என்பது போல, தி.மு.கழகமும் மக்களால் மக்களுக்காக மக்களுடைய மாபெரும் இயக்க மாக, ஏறத்தாழ முக்கால் நூற்றாண்டு காலமாக, தங்கு தடையின்றி, வெற்றிகரமாகப் பயணித்துக் கொண்டிருக்கிறது.

ஆட்சி மாற்றத்திற்கு தமிழக மக்கள் ஆயத்தமாகிவிட்ட நிலையில், அவர்களின் ஒரே நம்பிக்கைக்குரியதாக இருப்பது, தி.மு.கழகத்தின் தலைமையிலான சிறப்பான கூட்டணிதான். காரணம், ஆட்சியில் இல்லாதபோதும் மக்களுக்கு எப்போதும் துணையாக இருக்கின்ற இயக்கம் இது.

விவசாயிகளின் வாழ்வுரிமையைப் பறிக்கும் மத்திய பா.ஜ.க. அரசின் வேளாண் திருத்தச் சட்டங்கள், அ.தி.மு.க. எம்.பி.க்களின் ஆதரவால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நிலையில், அவற்றைத் திரும்பப் பெறக்கோரி நாடு முழுவதும் குரல் ஒலிக்கிறது.

மத்தியில் ஆள்கின்ற பா.ஜ.க. மோடி அரசு. அதன் ஒற்றைப் பார்வையும், இறுமாப்பும்தான், குடியரசு நாளில் இந்திய ஒன்றியத்தின் தலைநகரில் ஏற்பட்ட அசம்பா விதங்களுக்கு காரணமாகும். தமிழகத்திலும் நடைபெற்ற தன்னெழுச்சியான விவசாயிகளின் பேரணிகளை முடக்கும் வகையில் அ.தி.மு.க. அரசின் காவல்துறை கண் மூடித்தனமாகச் செயல்பட்டது.

மத்திய அரசுத் தரப்பில் தீர்வுக்கான முயற்சிகளை விருப்பத்துடன் எடுக்கவேயில்லை. அமைதியாகப் போராடியவர்களை வன்முறையாளர்களாகச் சித்தரிக்கும் போக்கையே கடைப்பிடித்தது; வன்மத்தை வெளிப்படுத்தியது. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவது ஒன்றே நிரந்தரத் தீர்வாக அமையும்.

கழகத்தைப் பொறுத்தவரை, மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். பேரிடர் நேரத்திலும் மக்களுக்குத் துணை நிற்க வேண்டும் என்ற நோக்கத்துடன்தான் “ஒன்றிணைவோம் வா” என கொரோனா பேரிடர் காலத்தில் உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் துணை நின்றது. அண்மையில், தமிழகத்தின் 16 ஆயிரத்து 500 ஊராட்சி மற்றும் வார்டுகளில் மக்களின் பெருந்திரளான பங்கேற்புடன் ‘மக்கள் கிராம சபைக் கூட்டங்களை’ நடத்தி, அவர்களின் குறைகளைச் செவிமடுத்த இயக்கம் இது.

“மு.க.ஸ்டாலின் வாங்கிய மனுக்கள் என்னாயிற்று?” என்று கேட்கிறார் முதல்- அமைச்சர் பழனிசாமி. அவருடைய எடப்பாடி தொகுதி மக்களே, குவியல் குவியலாக தங்கள் குறைகளை, மனுக்களாக தி.மு.கழகம் நடத்திய மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் வழங்கியதுடன், ‘அ.தி.மு.க.வை நிராகரிக்கிறோம்’ என ஒருமனதாகத் தீர்மானமும் நிறைவேற்றி உள்ளனர். தி.மு.க. மீது எந்தளவு நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்பதற்கும், இதைவிட வேறு சான்று தேவையில்லை.

கலைஞரால் வளர்த்தெடுக்கப்பட்ட உங்களில் ஒருவனான நான் எப்போதும் போல எனக்கான தொகுதியில் போட்டியிடுவேன். ஆனாலும், 234 தொகுதிகளிலும் நான் போட்டியிடுவதாக நினைத்து அல்ல, தலைவர் கலைஞர் அவர்களே போட்டியிடுவதாக நினைத்துப் பணியாற்றுவேன். அ.தி.மு.க. அமைச்சர்களில் ஒருவர்கூட வெற்றி பெற முடியாதபடி மக்களின் தீர்ப்பு இருக்கும்.

நம் மீது நம்பிக்கை வைத்து மக்கள் அளிக்கவிருக்கும் தீர்ப்புக்குத் தலைவணங்கி, அவர்களின் குறைகளைக் களைவதுதான் நமது முதல் நோக்கம். அதைத்தான், நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்களின் கோபாலபுரம் இல்லத்தின் வாயிலில் நின்று பிரகடனமாக அறிவித்தேன்.

“மு.க.ஸ்டாலின் ஆகிய நான் உங்கள் முன்னிலையில் ஒரு உறுதி அளிக்கிறேன். உங்களுடைய பிரச்சினைகளை தீர்ப்பதே என்னுடைய முதல் பணி. எனது அரசினுடைய முதல் 100 நாட்கள் போர்க்கால அடிப்படையில் உங்களுடைய பிரச்சினைகளைத் தீர்வு காண்பதற்கு அர்ப்பணிக்கப்படும். இதற்கு நான் பொறுப்பு. இதுவே தமிழ் நான் அளிக்கக்கூடிய உறுதிமொழி” என செய்தியாளர்கள் முன்னிலையில் மக்களுக்கு நம்பிக்கையை வழங்கினேன்.

‘இதற்கு நானே பொறுப்பு’ என்ற உத்தரவாதத்தை வழங்கிட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். அந்த உத்தரவாதத்தையும் வழங்கியிருக்கிறேன்.

மக்களின் குறை தீர்க்கும் பெரும் பொறுப்புக்கான முன்னெடுப்பை எவ்விதக் குறைபாடும் இல்லாத வகையில் நடத்திடுவோம். மனுக்களை அளிக்க வருகின்ற மக்களுக்குத் தேவையான இடவசதி, கொரோனா காலத்தை மனதில் கொண்டு போதிய இடைவெளி, காற்றோட்டம், குடிநீர் வசதி, முதியவர்கள் - பெண்கள் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் சிரமமின்றி மனு தருவதற்கேற்ப வசதிகள் உள்ளிட்ட அனைத்திலும் கவனம் செலுத்திட வேண்டும்.

ஆட்சியாளர்களின் சதி வலைகளை அறுத்தெறிந்திட வேண்டும். எப்போதும் மக்கள் பக்கம் நிற்க வேண்டும். அதற்கான ஒத்துழைப்பை உங்களில் ஒருவனான நான், ஒவ்வொரு உடன்பிறப்பிடமும் எதிர்பார்க்கிறேன். கழகத்தின் மாவட்ட - ஒன்றிய - நகர - பேரூர் கிளைக் கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் அனைவருக்கும் இதில் பெரும் பொறுப்பு உள்ளது. அதனை முழுமையாக நிறைவேற்றுவோம்.

கழக அரசு நிறைவேற்றவுள்ள 100 நாள் வேலைத் திட்டத்தின் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை, தேர்தல் களத்தில் நூற்றுக்கு நூறு சதவீத அளவிலான வெற்றியாக அமையும். “மி‌ஷன் 200” என்கிற இலக்கையும் தாண்டும். வெற்றி விளைந்திருக்கிறது. அறுவடை நாள் வரை அர்ப்பணிப்புடன் பணியாற்றுவோம்!

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News