செய்திகள்
அமைச்சர் அன்பழகன்

அரியர் தேர்வு தொடர்பாக ஏஐசிடிஇ தலைவர் அரசுக்கு எந்த கடிதமும் எழுதவில்லை - அமைச்சர் அன்பழகன் திட்டவட்டம்

Published On 2020-09-16 14:33 GMT   |   Update On 2020-09-16 14:33 GMT
அரியர் தேர்வு தொடர்பாக ஏ.ஐ.சி.டி.இ. தலைவர் அரசுக்கு எந்த கடிதமும் எழுதவில்லை என சட்டப்பேரவையில் உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
சென்னை:

தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட உயர்மட்டக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், இறுதி செமஸ்டர் தேர்வுகளை தவிர பிற செமஸ்டர் தேர்வுக்கான கட்டணம் செலுத்தி காத்திருக்கும் மாணவர்களுக்கும் பல்கலைக்கழக மானியக்குழு(யு.ஜி.சி.), அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழு(ஏ.ஐ.சி.டி.இ.) வழிகாட்டுதலின்படி தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளித்து மதிப்பெண்கள் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

அரியர் தேர்வு எழுதவிருந்த மாணவர்களுக்கும் இறுதி பருவ தேர்வை தவிர மற்ற தேர்வுகளுக்கு விலக்கு அளிக்கப்படவதாகவும் அரசு அறிவிக்கப்பட்டது. இதனிடையே, பொறியியல் படிப்பில் அரியர் மாணவர்கள் தேர்ச்சி என்ற தமிழக அரசின் முடிவை ஏற்க அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.) மறுப்பு தெரிவித்து கடிதம் அனுப்பியதாக அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா அண்மையில் தெரிவித்திருந்தார். ஆனால் ஏ.ஐ.சி.டி.இ. எந்த மின்னஞ்சலும் அனுப்பவில்லை என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் இன்று பேசிய தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன், அரியர் தேர்வில் அனைவரும் பாஸ் என்ற அறிவிப்பு தொடர்பாக மாணவர்கள் யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை என்று தெரிவித்தார். செமஸ்டர் இறுதி தேர்வு தவிர பிற தேர்வுக்கு, பணம் செலுத்திய அனைவரும் தேர்ச்சி பெறுவார்கள் என்று அவர் கூறினார்.

யு.ஜி.சி., ஏ.ஐ.சி.டி.இ. ஆகியவற்றின் வழிகாட்டுதல்படியே அரியர் மாணவர்கள் தேர்ச்சி குறித்து அரசு முடிவெடுத்துள்ளது என்றும் அரியர் தேர்வில் ஆல் பாஸ் என்ற தமிழக அரசின் அறிவிப்பு தொடர்பாக ஏ.ஐ.சி.டி.இ. மின்னஞ்சல் எதுவும் அனுப்பவில்லை என்றும் அவர் தெரிவித்தார். மேலும் இந்த விஷயத்தில் மாணவர் சமுதாயத்தை ஏமாற்றும் எண்ணம் அரசுக்கு இல்லை என்று அமைச்சர் அன்பழகன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News