செய்திகள்
உடுமலை பி.ஏ.பி., கால்வாய்

உடுமலை பி.ஏ.பி., கால்வாய் புதுப்பிக்கும் பணிகள் தொடக்கம்

Published On 2021-06-10 07:28 GMT   |   Update On 2021-06-10 07:28 GMT
பி.ஏ.பி.கால்வாய் முழுவதும் கான்கிரீட் கால்வாயாக அமைந்திருந்தாலும் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டும், கான்கிரீட் கரைகள், சிலாப்கள் உடைந்தும் காணப்படுகிறது.
உடுமலை:

பி.ஏ.பி., பாசனத்திட்டத்தில் பிரதான கால்வாய்க்கு இணையாக நான்கு மண்டல பாசனத்திற்கும் நீர் திறக்கும் வகையில் உடுமலை கால்வாய் அமைந்துள்ளது. திருமூர்த்தி அணை அருகே துவங்கும் கால்வாய்  தாராபுரம் தாலுகா வரை 38.12 கி.மீ., தூரம் உள்ளது. இதன் வாயிலாக 58 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

முழுவதும் கான்கிரீட் கால்வாயாக அமைந்திருந்தாலும் தொடர் பராமரிப்பு இல்லாததால் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டும், கான்கிரீட் கரைகள், சிலாப்கள் உடைந்தும் காணப்படுகிறது.இதனால் நீர் விரையம் அதிகரித்து பாசன நிலங்களுக்கு போதிய அளவு நீர் கிடைக்காததோடு பாசன காலங்களில் திடீர் உடைப்பு ஏற்பட்டு வந்தது.இதற்கு தீர்வு காண உடுமலை கால்வாயை புதுப்பிக்க வேண்டும் என பல ஆண்டுகளாக விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில் மிகவும் மோசமாக காணப்பட்ட 6.57 கி.மீ., நீளம் கால்வாய் ரூ.2.95 கோடி செலவில் புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது. பழுதடைந்துள்ள கான்கிரீட் கரைகள் மற்றும் கான்கிரீட் சிலாப்கள் முழுமையாக அகற்றப்பட்டு, கம்பிகள் அமைத்து புதிதாக கான்கிரீட் கரைகள் அமைக்கப்படுகிறது. சிலாப்கள் ஒட்டப்பட உள்ளன. இதற்காக பழநி ரோடு துவங்கி படிப்படியாக பணிகள் நடந்து வருகிறது. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

பி.ஏ.பி., 3ம் மண்டல பாசனம் முடிந்து 4ம் மண்டல பாசனத்திற்கு ஆகஸ்ட் மாதம் தண்ணீர் திறக்கப்பட உள்ளது. அதற்குள் கான்கிரீட் கரைகள் பலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இரு மாதத்திற்குள் பணியை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றனர்.

விவசாயிகள் கூறுகையில், உடுமலை கால்வாயில் மானுப்பட்டி, கிளுவன்காட்டூர் உள்ளிட்ட 4 இடங்களில்  சாலையின் குறுக்கே பழைய முறைப்படி குழாய்பாலம் அமைந்துள்ளது. பாசன காலங்களில் நீர் திறக்கும் போது குப்பைகள் அடைத்து கடும் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே இப்பகுதிகளில் தடையின்றி நீர் செல்ல உயர் மட்ட பாலம் அமைக்க வேண்டும்.

அதேபோல் கால்வாயில் கரைகள் உடைந்து, சேதமடைந்த அனைத்து பகுதிகளையும் முழுமையாக புதுப்பிக்க போதிய நிதி ஒதுக்க வேண்டும். உடுமலை கால்வாய் பெரும்பாலும் குடியிருப்பு பகுதிகள் வழியாக வருகிறது. இதனால் ஜல்லிபட்டி, பள்ளபாளையம், போடிபட்டி, கணக்கம்பாளையம், கண்ணமநாயக்கனூர், உடுமலை நகர பகுதிகளில் கால்வாய் மற்றும் கால்வாய் கரைகள் ஆக்கிரமிப்பு மற்றும் குப்பை கொட்டும் மையமாக மாற்றப்பட்டுள்ளது.

பெரும்பாலான ஊராட்சிகளின் குப்பை கிடங்கு கால்வாய் கரையில் அமைந்துள்ளது. பாசன நீரில் பிளாஸ்டிக் கழிவுகள், துணிகள், கண்ணாடிகள் உள்ளிட்ட குப்பைகள் மிதந்து பாசன நிலங்களுக்குள் கலக்கிறது. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கின்றனர். எனவே கால்வாய்கரையில் குப்பை கொட்டுவதை தடுக்க நிரந்தர ஏற்பாடுகளும் செய்ய வேண்டும். இவ்வாறு  விவசாயிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News