செய்திகள்
கூட்டத்தில் பங்கேற்றவர்கள்.

டாஸ்மாக் கடை - பன்றி பண்ணையை அகற்ற வேண்டும் - பொங்கலூர் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டத்தில் வலியுறுத்தல்

Published On 2021-09-14 08:21 GMT   |   Update On 2021-09-14 08:21 GMT
டி.ஆண்டிபாளையத்தில் நிலவும் குடிநீர் பற்றாக்குறையை போக்கும் வகையில் 30ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டி தர வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
பல்லடம்:

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் ஒன்றியகுழு தலைவர் குமார் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் அபிராமி அசோகன் முன்னிலை வகித்தார். ஒன்றிய ஆணையாளர் கலைசெல்வி, வட்டார வளர்ச்சி அலுவலர் மகேந்திரன் மற்றும் கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர்.  

கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர் ஜோதிபாசு (மார்க்சிய கம்யூனிஸ்ட்) பேசியதாவது, குப்புச்சிபாளையம் பிரிவில் தனியார் தோட்டத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் கடை அருகே நிறைய விபத்துகள் ஏற்படுகிறது. எனவே டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய வேண்டும். குமாரபாளையம் பகுதியில் கைகாட்டி செல்லும் பாதையில் பாறைக்குழி உள்ளது. அதனை சுற்றி தடுப்புச்சுவர் அமைத்து தர வேண்டும். 

டி.ஆண்டிபாளையத்தில் நிலவும் குடிநீர் பற்றாக்குறையை போக்கும் வகையில் 30ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டி தர வேண்டும். இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட தொகுப்பு வீடுகள் பழுதடைந்துள்ளன அந்த வீடுகளை பராமரிக்க நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். 

கைகாட்டி மற்றும் மலைப்பாளையத்திற்கு இடையில் உள்ள பன்றி பண்ணையால் சுற்றுப்புறச்சூழல் மாசு அடைகிறது. துர்நாற்றம் வீசுகிறது. இதனால் நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே பன்றி பண்ணையை அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். ஒன்றிய கவுன்சிலர் சுப்பிரமணியம் (தி.மு.க.) பேசுகையில், பொல்லிகாளிபாளையம் அரசு தொடக்கப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளியில் 1200 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். 

அவர்களுக்கு தற்போது உள்ள கழிப்பிடம் போதுமானதாக இல்லை. அதனால் மாணவர்கள் குறிப்பிட்ட இடைவேளை நேரத்திற்குள் இயற்கை உபாதையை கழிக்க மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே கூடுதலாக கழிப்பிடம் கட்டி தர வேண்டும் என்றார்.

ஒன்றியகுழு தலைவர் குமார்(தி.மு.க.) பேசுகையில், 15வது நிதிக்குழு மானியமாக பொங்கலூர் ஒன்றியத்திற்கு ரூ.98 லட்சம் நிதி வந்துள்ளது. இத்தொகை மற்றும் ஒன்றிய பொது நிதி ஆகியவற்றின் மூலம் வளர்ச்சி திட்டப்பணிக்காக 13 ஒன்றிய கவுன்சிலர்களுக்கும் நிதி பிரித்து வழங்கப்படும். 

குடிநீர்,சாலை, மழை நீர் வடிகால் போன்ற அடிப்படை வசதிகளுக்கு முக்கியத்துவம் அளித்து பணிகளை செய்திட வேண்டும். ஒன்றிய நிர்வாகத்திற்கு வருமானத்தை பெருக்கும் வகையில் வணிக வளாக கடைகள் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்ள ஆலோசித்து வருகிறோம். இவ்வாறு அவர் பேசினார் . 

கூட்டத்தில் 34 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஏற்கனவே அறிவிக்கப்பட்டு நிலுவையில் இருந்த ரூ. 24 லட்சம் மதிப்பிலான திட்டங்கள் ரத்து செய்யப்பட்டன.
Tags:    

Similar News