செய்திகள்
எல்லையில் நடந்த மோதல்

அசாம்-மிசோரம் எல்லையில் மீண்டும் வன்முறை... டுவிட்டரில் மோதிக்கொண்ட முதல்வர்கள்

Published On 2021-07-26 15:32 GMT   |   Update On 2021-07-26 15:32 GMT
மக்கள் கைகளில் ஆயுதங்களுடன் வன்முறையில் ஈடுபடும் வீடியோவை பதிவு செய்த மிசோரம் முதல்வர் சோரம்தங்கா, இதில் உள்துறை மந்திரி அமித் ஷா தலையிட வேணடும் என்று கூறி உள்ளார்.
ஷில்லாங்:

அசாம், மிசோரம் மாநிலங்களுக்கு இடையே பல ஆண்டுகளாக எல்லை பிரச்சனை நீடித்து வருகிறது. அசாம் மாநிலத்தின் எல்லையான கொலாசிப் மாவட்டம் மற்றும் மிசோரம் மாநில எல்லையான சச்சார் மாவட்டத்தில் அவ்வப்போது மோதல்கள் நிகழ்கின்றன. அடுத்தடுத்து பேச்சுவார்த்தைகள் நடத்தியபோதிலும், முடிவு எட்டப்படவில்லை.

இந்நிலையில், எல்லையில் பிரச்சனைக்குரிய பகுதியில் இன்று மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. துப்பாக்கி சூடும் நடந்துள்ளது. மோதலின்போது அரசு வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. வடகிழக்கு மாநிலங்களின் முதல்வர்களை உள்துறை மந்திரி அமித் ஷா சந்தித்து பேசிய இரண்டு நாட்களுக்கு பிறகு இந்த வன்முறை ஏற்பட்டதால் இந்த விவகாரம் மீண்டும் உள்துறை மந்திரியின் கவனத்திற்கு சென்றுள்ளது. உடனடியாக அவர் இரண்டு மாநில முதல்வர்களையும் தொடர்பு கொண்டு பேசி உள்ளார். ஏற்கனவே ஒப்புக்கொண்டபடி எல்லை பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என அமித் ஷா கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது. பின்னர் பிரச்சனைக்குரிய பகுதியில் இருந்து இரு மாநில போலீஸ் படைகளும் திரும்பிச் சென்றுவிட்டன.

இந்த மோதல் தொடர்பாக இரு மாநில முதல்வர்களும் டுவிட்டரில் வீடியோக்களை பதிவு செய்து, கருத்து மோதல்களில் ஈடுபட்டனர். உள்துறை மந்திரி அமித் ஷாவையும் டேக் செய்துள்ளனர்.


மக்கள் கைகளில் ஆயுதங்களுடன் வன்முறையில் ஈடுபடும் வீடியோவை பதிவு செய்த மிசோரம் முதல்வர் சோரம்தங்கா, இதில் உள்துறை மந்திரி அமித் ஷா தலையிட வேணடும் என்றும், வன்முறை உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று கூறி உள்ளார்.

சேதமடைந்த கார் தொடர்பான மற்றொரு வீடியோவையும் சேரம்தங்கா பகிர்ந்தார். சச்சார் வழியாக மிசோரம் வந்த ஒரு தம்பதியர் தாக்கப்பட்டுள்ளனர், இந்த வன்முறைச் செயல்களை நீங்கள் எவ்வாறு நியாயப்படுத்தப் போகிறீர்கள்? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளித்த அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, ‘மிசோரம் பகுதி மக்கள் வன்முறையை நிறுத்தாத நிலையில், எங்கள் படைகளை திரும்பி செல்லும்படி கோலாசிப் (மிசோரம்) எஸ்பி கேட்கிறார். இத்தகைய சூழ்நிலைகளில் நாங்கள் எவ்வாறு அரசாங்கத்தை நடத்த முடியும்? நீங்கள் விரைவில் தலையிடுவீர்கள் என்று நம்புகிறேன்’, என கூறி உள்ளார்.

அதன்பின்னர் மிசோரம் முதல்வருடன் பேசியதாக சர்மா ட்வீட் செய்தார். ‘எல்லைகளில் அசாம் அரசு அமைதியை நிலைநாட்டும் என்றும், தேவைப்பட்டால் ஐசால் வந்து பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாகவும் மிசோரம் முதல்வரிடம் கூறி உள்ளேன்’ என்று கூறியிருந்தார்.

எனினும், ‘ஆலோசனை நடத்தியபடி பொதுமக்களின் பாதுகாப்பிற்காக வைரெங்டேவில் இருந்து விலகுமாறு அசாம் காவல்துறைக்கு அறிவுறுத்த வேண்டும்’ என சோரம்தங்கா கேட்டுக்கொண்டார்.

Tags:    

Similar News