செய்திகள்
மரணம்

போலீசாருக்கு சங்கம் கேட்டு போராடிய சப்-இன்ஸ்பெக்டர் மாரடைப்பால் மரணம்

Published On 2019-10-10 09:34 GMT   |   Update On 2019-10-10 09:34 GMT
போலீசாருக்கு சங்கம் கேட்டு போராடிய சப்-இன்ஸ்பெக்டர் இன்று அதிகாலை மாரடைப்பால் உயிரிழந்தார்.

சென்னை:

சிந்தாதிரிப்பேட்டை போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் சிவக்குமார் (வயது 55). இவர் புதுப்பேட்டையில் உள்ள ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

நேற்று இரவு சிவக்குமார் வீட்டில் குடும்பத்துடன் தூங்கினார். இன்று அதிகாலை 2 மணியளவில் திடீரென அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கினார். உடனடியாக அவரை தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே மாரடைப்பில் சிவகுமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவருக்கு மனைவியும், 2 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர்.

இறந்து போன சப்- இன்ஸ்பெக்டர் சிவக்குமார் 1988-ம் ஆண்டு போலீஸ் பணியில் சேர்ந்தார். அவர் “தமிழ்நாடு காவல்துறை காவலர் சங்கம்” என்ற பெயரில் சங்கம் தொடங்கி தலைவராக செயல்பட்டு வந்தார்.

போலீஸ் சங்கத்திற்கு அங்கீகாரம் பெற பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தார். இதனால் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமாருக்கு மனநலம் பாதித்ததாக குற்றச்சாட்டும் எழுந்தது.

கடந்த 18 ஆண்டுகளாக போலீஸ் சங்கத்திற்கு அங்கீகாரம் கேட்டு போராடி வந்த அவர் இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டிலும், சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News