இந்தியா
பிரதமர் மோடி

உத்தரபிரதேச சட்டசபை தேர்தல்- பிரதமர் மோடி முதல் முறையாக 31-ந்தேதி காணொலியில் பிரசாரம்

Published On 2022-01-29 07:05 GMT   |   Update On 2022-01-29 07:05 GMT
முதல்கட்ட தேர்தல் நடைபெற உள்ள ‌ஷகாரன்பூர், பாக்பாத், ‌ஷமிலி, முசாபர் நகர், கவுதம புத்தா நகர் ஆகிய 5 மாவட்டங்களில் மோடியின் பேச்சை கேட்பதற்கான ஏற்பாடுகளை பா.ஜனதாவினர் செய்து வருகின்றனர்.
லக்னோ:

உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தலில் பொதுக்கூட்டம், ரோடு ஷோ ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக வருகிற 31-ந்தேதி வரை இந்த தடையை தலைமை தேர்தல் ஆணையம் நீட்டித்துள்ளது.

அரசியல் கட்சிகள் வீடு வீடாக சென்றும், சமூக வலைதளங்களிலும் இந்த மாநிலங்களில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி உத்தரபிரதேச மாநிலத்தில் முதல் முறையாக காணொலி வாயிலாக தேர்தல் பிரசார பொதுகூட்டத்தில் பேசுகிறார். வருகிற 31-ந்தேதி அவர் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக பா.ஜனதாவுக்கு ஆதரவு திரட்டுகிறார்.

உத்தரபிரதேசத்தில் வருகிற 10-ந்தேதி முதல் மார்ச் 7-ந்தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது.

இதில் முதல்கட்ட தேர்தல் நடைபெற உள்ள ‌ஷகாரன்பூர், பாக்பாத், ‌ஷமிலி, முசாபர் நகர், கவுதம புத்தா நகர் ஆகிய 5 மாவட்டங்களில் மோடியின் பேச்சை கேட்பதற்கான ஏற்பாடுகளை பா.ஜனதாவினர் செய்து வருகின்றனர்.

21 தொகுதிகளை கவரும் விதமாக மோடியின் காணொலி பேச்சுக்கு பா.ஜனதாவினர் இலக்காக வைத்துள்ளனர்.

மோடியின் வீடியோ கான்பரன்ஸ் பேச்சை கேட்க மிகப்பெரிய எல்.இ.டி. ஸ்கிரீன் 5 மாவட்டங்களில் வைக்கப்படுகிறது. ஒரு பொதுக்கூட்டத்தில் எல்.இ.டி. ஸ்கிரீனை பார்ப்பதற்கு 500 பேர் வரைதான் தேர்தல் கமி‌ஷன் அனுமதித்துள்ளது.

மோடியின் முதல் காணொலி கூட்டத்தில் 50 ஆயிரம் பேர் வரை எல்.இ.டி. ஸ்கிரீனில் பார்க்க பா.ஜனதா இலக்காக வைத்துள்ளது.

இதேபோல மோடியின் காணொலி பேச்சை அனைத்து சமூக வலைதளங்களில் ஒளிபரப்பவும் பா.ஜனதா முடிவு செய்துள்ளது.


Tags:    

Similar News