செய்திகள்
கொரோனா வைரஸ்

கோவையில் படிப்படியாக குறையும் கொரோனா தொற்று

Published On 2021-06-01 10:49 GMT   |   Update On 2021-06-01 10:49 GMT
கோவையில் கடந்த வாரங்களில் 40 சதவீதத்திற்கு மேல் இருந்த கொரோனா பரவல் சதவீதம் தற்போது 34 சதவீதமாக குறைந்துள்ளது.
கோவை:

கோவை மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதத்திற்கு முன்பு வரை தொற்று பாதிப்பு குறைவாகவே பதிவாகி வந்தது.

மார்ச் மாத இறுதியில் கொரோனா தொற்றின் 2-வது அலை பரவ தொடங்கியதும் மாவட்டத்தில் தொற்று எண்ணிக்கையும் வேகமாக உயர தொடங்கியது.

குறிப்பாக கடந்த ஏப்ரல் 1-ந் தேதியில் இருந்தே கொரோனா தொற்று மாவட்டத்தில் நகர் பகுதி மட்டுமின்றி கிராம பகுதிகளிலும் மின்னல் வேகத்தில் பரவ தொடங்கியது. முதலில் 100 என்ற எண்ணிக்கையில் ஆரம்பித்த தொற்று எண்ணிக்கை இறுதியில் இதுவரை இல்லாத உச்சமாக 4,700-யை தாண்டி சென்றது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மாதம் 10-ந் தேதி முதல் தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல் படுத்தப்பட்டது. ஆனால் பொதுமக்கள் ஊரடங்கையும் மீறி சுற்றி திரிந்ததால் கோவையில் தொற்று பரவல் கட்டுக்கடங்காமல் பரவி கொண்டே சென்றது. இதனால் கடந்த சில நாட்களாகவே தொற்று பாதிப்பில் கோவை முதலிடத்தில் இருந்து வருகிறது.

இதனையடுத்து, கடந்த மே 24-ந் தேதி முதல் தளர்வுகளற்ற முழுஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இது வருகிற 7-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காரணமாக சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கொரோனா பரவல் குறைந்துள்ளது. ஆனால், கோவையில் நோய்த்தொற்று எண்ணிக்கை சென்னையை காட்டிலும் அதிகரித்து காணப்பட்டது.

இதையடுத்து கோவை மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட, எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலின் 2 முறை நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு பணி, மருத்துவ வசதிகள், ஆக்சிஜன் படுக்கை வசதிகள் குறித்து அதிகாரிகள், டாக்டர்களிடம் கேட்டறிந்ததுடன், மாவட்டத்தில் தடுப்பு பணியை தீவிரப்படுத்துமாறு கலெக்டருக்கு உத்தரவிட்டார்.

மேலும் நேற்று முன்தினம் இ.எஸ்.ஐ ஆஸ்பத்திரியில் நேரில் ஆய்வு மேற்கொண்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பி.பி.கிட் உடையணிந்து கொரோனா வார்டுக்கு சென்று நோயாளிகளிடம் நலம் விசாரித்ததுடன் அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.

மேலும் மாவட்டத்தில் தொற்று பரவலை கட்டுப்படுத்த சிறப்பு அதிகாரியாக சித்திக் நியமிக்கப்பட்டார். அவர் கோவை மாவட்ட கலெக்டர் மற்றும் மாநகராட்சி கமி‌ஷனர், அனைத்து துறை அதிகாரிகளுடன் இணைந்து மாவட்டம் முழுவதும் கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொண்டு தீவிரப்படுத்தினார்.

மேலும் அமைச்சர்கள் சுப்பிரமணியன், சக்கரபாணி ராமச்சந்திரன் ஆகியோரும் பலமுறை ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி கொரோனா பரவலை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

அதிகாரிகள் மேற்கொண்ட கொரோனா தடுப்பு பணி மற்றும் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு தற்போது மாவட்டத்தில் நல்ல பலனை கொடுத்து வருகிறது.

கடந்த 2 நாட்களாக கோவையில் தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. 2 நாட்களுக்கு முன்பு வரை 4 ஆயிரத்திற்கும் அதிகமாக சென்ற பாதிப்பு எண்ணிக்கை தற்போது 4 ஆயிரத்திற்கு கீழ் வந்துள்ளது. அதுவும் நேற்று 3,500-க்கும் கீழ் தொற்று பாதிப்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. இதனால் பொதுமக்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர்.

கடந்த 28-ந் தேதி 3,937 பேருக்கும்,29-ந் தேதி 3,692 பேருக்கும்,30-ந்தேதி 3,537 பேருக்கும், நேற்று 3,488பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் இதுவரை 1 லட்சத்து 70ஆயிரத்து 497பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 1 லட்சத்து 30 ஆயிரத்து 29 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 39 பேர் உயிரிழந்ததால் எண்ணிக்கை 1,274 ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் மாவட்டம் முழுவதும் 551 பேர் கொரோனாவுக்கு பலியாகி இருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் 40 வயது முதல் 50 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவார்கள்.

இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

கோவையில் மே மாத தொடக்கத்தில் தினமும் 7 ஆயிரம் முதல் 8 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வந்தது. நோய் பரவல் அதிகரிக்கவே கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 13 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த 3 நாட்களாக கோவையில் நோய்த் தொற்று பாதிப்பு எண்ணிக்கையும், பரவலும் சற்று குறைந்துள்ளது. ஊரடங்கினால் பொதுமக்கள் நடமாட்டம் குறைந்தது தான் கொரோனா பரவல் குறைய முக்கிய காரணம்.

கோவையில் கடந்த வாரங்களில் 40 சதவீதத்திற்கு மேல் இருந்த கொரோனா பரவல் சதவீதம் தற்போது 34 சதவீதமாக குறைந்துள்ளது. கொரோனா பரவல் குறைந்திருந்தாலும் பரிசோதனை எண்ணிக்கை குறைக்கப்படவில்லை. ஊரடங்கு ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் வரும் வாரங்களில் நோய் தொற்று பாதிப்பு மேலும் குறைய வாய்ப்புள்ளது. வருகிற 10-ந் தேதிக்குள் தினசரி பாதிப்பு 1,500-க்கு கீழ் வரும் என எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.
Tags:    

Similar News