லைஃப்ஸ்டைல்
இயற்கையாகவே நகங்களின் வளர்ச்சியை அதிகரிக்க என்ன செய்யலாம்

இயற்கையாகவே நகங்களின் வளர்ச்சியை அதிகரிக்க என்ன செய்யலாம்

Published On 2021-01-30 06:30 GMT   |   Update On 2021-01-30 06:30 GMT
ஒருசில வழிமுறைகளை பின்பற்றினால் இயற்கையாகவே நகங்களின் வளர்ச்சியை அதிகரிக்கச் செய்யலாம். நீண்ட நகங்களுக்கு சொந்தம் கொண்டாடி விடலாம். அதற்கு செய்ய வேண்டிய வழிமுறைகள்:
நகங்களை நீளமாக வளர்ப்பதற்கு நிறைய பெண்கள் விரும்புகிறார்கள். ஒரு சிலர் நகங்களாவது தங்கள் ஆசைக்கனவை நிறைவேற்றித்தரும் என்ற நம்பிக்கையில் நகங்களை பராமரிப்பதற்கு மெனக்கெடுகிறார்கள். ஒருசில வழிமுறைகளை பின்பற்றினால் இயற்கையாகவே நகங்களின் வளர்ச்சியை அதிகரிக்கச் செய்யலாம். நீண்ட நகங்களுக்கு சொந்தம் கொண்டாடி விடலாம். அதற்கு செய்ய வேண்டிய வழிமுறைகள்:

தேங்காய் எண்ணெய்: சருமம், கூந்தலுக்கு மட்டுமின்றி நகங்களை மேம்படுத்தவும் தேங்காய் எண்ணெய்யை உபயோகிக்கலாம். அதிலும் உடையும் தன்மை இல்லாத நகங்களாக இருந்தால் தேங்காய் எண்ணெய்யை தாராளமாக உபயோகிக்கலாம். ஒரு கிண்ணத்தில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் எடுத்துக்கொள்ளவும். அதனுடன் அதே அளவு தேனும், 3 சொட்டு ரோஸ்மேரி எண்ணெய்யும் சேர்த்து கலக்கவும். இந்த கலவையை லேசாக சூடாக்கி அதனுள் கால் மணி நேரம் நகங்களை முக்கி வைக்கவும். வாரத்தில் இரண்டு, மூன்று முறை இவ்வாறு செய்து வந்தால் நகங்கள் வேகமாக வளரத் தொடங்கும். ஓரிரு வாரங்களிலேயே நகங்களின் வளர்ச்சியை கண்கூடாக காணலாம்.

பால்-முட்டை: இது நகங்களின் வளர்ச்சியை தூண்டும் சக்திவாய்ந்த கலவையாகும். முட்டையின் மஞ்சள் கருவுடன் சிறிதளவு பால் சேர்த்து நன்றாக கிளறவும். இந்த கலவையில் 10 நிமிடங்கள் நகங்களை முக்கிவைக்கவும். வாரத்தில் இரண்டு, மூன்று முறை செய்து வரலாம்.

எலுமிச்சை சாறு: இது நகங்களின் வளர்ச்சியையும், வலிமையையும் உறுதிப்படுத்தும் தன்மை கொண்டது. இதிலிருக்கும் வைட்டமின் சி, நகங்களை பலப் படுத்தும். அதன் வளர்ச்சியை ஊக்குவிக்கும். காட்டன் பஞ்சுவில் எலுமிச்சை சாறை முக்கி நகங்களுக்குள் சிறிது நேரம் சொருகி வைக்கலாம். சிறிதளவு சூடான ஆலிவ் எண்ணெய்யுடன் அதே அளவு எலுமிச்சை சாறை கலந்து நகங்கள் மீது தடவி கால் மணி நேரம் மசாஜ் செய்து வரலாம்.

பற்பசை: நகங்களை வளர்ப்பதற்கு பற்பசையையும் பயன்படுத்தலாம். பல் துலக்கும் பற்பசையை நகங்கள் மீது தடவி நன்றாக தேய்த்துவிடவும். சிறிது நேரம் கழித்து கழுவிவிடலாம். வாரத்தில் மூன்று முறையாவது செய்து வரலாம். நகங்கள் நன்றாக வளரத் தொடங்கும்.

பூண்டு எண்ணெய்: பூண்டுவில் இருக்கும் செலினியம் நகங்களின் வளர்ச்சிக்கு உதவும். பூண்டுவை தோல் நீக்கி நறுக்கி நகங்களில் தேய்த்து வரலாம். பூண்டு எண்ணெய்யையும் பயன்படுத்தலாம். ஒரு முழு பூண்டுவை தோல் நீக்கி சுத்தம் செய்து, சிறிதாக நறுக்கி அதனுடன் சிறிதளவு ஆலிவ் எண்ணெய் கலந்து வாணலியில் 10 நிமிடங்கள் சூடாக்கவும். எண்ணெய்யில் இருந்து புகை வெளிபடக்கூடாது. சிறு தீயில் பூண்டு நன்றாக பொறிந்ததும் இறக்கி, அந்த எண்ணெய்யை இரவில் நகங்களில் தேய்த்து மசாஜ் செய்து வரலாம்.
Tags:    

Similar News