செய்திகள்
கோப்புபடம்

தென்னை சாகுபடி-வளர்ச்சி வாரியம் உதவ வலியுறுத்தல்

Published On 2021-07-21 08:49 GMT   |   Update On 2021-07-21 08:49 GMT
திருப்பூர் மாவட்டத்தில் தென்னை சாகுபடியில் வெள்ளை ஈ தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு நோய்த்தாக்குதலால் சராசரி உற்பத்தி குறைந்து வருகிறது.
உடுமலை:

உடுமலை திருமூர்த்திநகரில் மத்திய அரசின் தென்னை வளர்ச்சி வாரியத்தின் நாற்றுப்பண்ணை மற்றும் ஆராய்ச்சி நிலையம் கடந்த 2015-ம் ஆண்டு 102 ஏக்கர் பரப்பளவில் தொடங்கப்பட்டது. இங்குள்ள நாற்றுப்பண்ணையில் ஆண்டுதோறும் 1.5 லட்சம் நாற்றுகள் வரை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வளாகத்தில் செயல் விளக்கத்திடலும் அமைக்கப்பட்டுள்ளது. 

தென்னை வளர்ச்சி வாரியத்தின் கொச்சி ஆராய்ச்சி நிலையம் மற்றும் கோவை வேளாண் பல்கலைகழகத்தின் ஆழியார் தென்னை ஆராய்ச்சி நிலையத்தில் தென்னை விவசாயிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு பயிற்சி வகுப்புகள், படிப்புகள் வழங்கப்பட்டு வருகிறது.

அதேபோல் திருமூர்த்தி நகர் ஆராய்ச்சி நிலையத்திலும் பயிற்சிகள் வழங்க பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். திருமூர்த்திநகரில் தென்னை வளர்ச்சி வாரியம் நாற்றுப்பண்ணை செயல்பாடுகளில் மட்டுமே கவனம் செலுத்துகிறது. ஆனால் ஆராய்ச்சி நிலையத்துக்கான எவ்வித கட்டமைப்புகளும் உருவாக்கப்படவில்லை.

திருப்பூர் மாவட்டத்தில் தென்னை சாகுபடியில் வெள்ளை ஈ தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு நோய்த்தாக்குதலால் சராசரி உற்பத்தி குறைந்து வருகிறது. இத்தகைய தாக்குதலை கட்டுப்படுத்த தொழில்நுட்ப வழிகாட்டுதல் கிடைக்காமல் தற்போது வரை பிரச்சினை தொடர் கதையாக உள்ளது. தென்னை ஆராய்ச்சி நிலையம் அருகில் இருந்தும் எவ்வித உதவியும் கிடைக்காதது விவசாயிகளை ஏமாற்றமடையச் செய்துள்ளது. எனவே புதிய ரகங்கள், நோய்த்தடுப்புக்கான மருந்துகள், தொழில்நுட்பங்கள் கண்டறிதல் உள்ளிட்ட பணிகளுக்காக அனைத்து கட்டமைப்புகளையும் திருமூர்த்திநகரில் ஏற்படுத்த வேண்டும். 

ஆண்டுதோறும் தென்னை சாகுபடி பரப்பு அதிகரித்து வரும் நிலையில் இக்கோரிக்கை குறித்து மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பல ஆயிரக்கணக்கான தென்னை விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Tags:    

Similar News