ஆன்மிகம்

சோதனைகளே சாதனைகளாய்...

Published On 2019-03-15 04:15 GMT   |   Update On 2019-03-15 04:15 GMT
சோதனைகளின்போது துவண்டு போகாமல், நிலை குலையாமல் நின்று வெற்றிகளை தட்டிச் செல்லக் கூடியவர்களாக மாறுவதற்கு வல்ல இறைவன் அருள்பாலிப்பானாக, ஆமீன்.
இன்று நம்மில் பலர், ‘சோதனை என்பது எனக்கு மட்டும்தான் நடக்கிறது’ என்று கற்பனை செய்து கொள்கிறார்கள். அது உண்மை தானா?

சோதனை என்பது இவ்வுலகத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் இருக்கின்றது. அதே சமயத்தில் அந்த சோதனையை மாற்றி சாதனை புரிபவர்கள் சொற்பமானவர்களே.

சிலருக்கு சோதனை ஏற்பட்டுவிட்டால் அப்படியே இடிந்து போய்விடுகிறார்கள். அனைத்தும் கை மீறி போய்விட்டது என்று நினைத்துக்கொள்கிறார்கள். அவற்றையே நினைத்து உழன்று கொண்டிருக்கிறார்கள்.

நாம் செய்யவிருக்கும் சாதனைகள், சோதனை என்ற கற்பனையால் முடங்கி போய்விடக்கூடாது, முட்டுக்கட்டையாக மாறிவிடக்கூடாது.

கரப்பான் பூச்சியைப் பாருங்கள், அந்தப் பூச்சி தலைகீழாக புரண்டுவிட்டால் என்ன செய்யும்? முதலில் கால்களை அடித்து திரும்ப முயற்சிக்கும். முடியவில்லை என்றால் சிறிது நேரம் கழித்து மீண்டும் அவ்வாறே கால்களை அடிக்கும். அப்போதும் திரும்பவில்லையென்றால் அவ்வளவு தான் என்று விட்டுவிடாது. மீண்டும் மீண்டும் முயற்சி செய்து எப்படியாவது எழுந்துவிடும்.

மனிதனும் அவ்வாறுதான் முயல வேண்டும். முடியவில்லை என்பதற்காக மூலையில் அமர்ந்து விடக்கூடாது.

சோதனையை சாதனையாக மாற்று

சோதனைகளைப் பொருட்படுத்தாமல் சாதனை படைத்தவர் தான் மிகப்பெரிய விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்ஸ். இவருக்கு இளமைப்பருவத்திலேயே உடலில் உள்ள கையும், காலும் செயல் இழந்துவிட்டது. இவரால் இனிமேல் எதுவும் செய்ய முடியாது என்று மருத்துவர்கள் கூறிய போது, மருத்துவரிடத்தில் இவர் கேட்ட ஒரே கேள்வி என்ன தெரியுமா?

“இதனால் என் மூளைக்கு எதாவது பாதிப்பு ஏற்படுமா?”

அதற்கு மருத்துவர்கள், “இதனால் உங்கள் மூளைக்கு எந்தவித பாதிப்பும் இல்லை” என்று கூறியவுடன், தனக்கு ஏற்பட்ட நோயையும் பொருட்படுத்தாமல் மகிழ்ந்தார்.

பின்னர் அவருடைய உடலில் உள்ள மொத்த உறுப்புகளும் கொஞ்சம் கொஞ்சமாக செயல் இழந்தது. ஆனாலும், இதனையெல்லாம் பொருட்படுத்தாமல் அடுத்த கட்ட செயலுக்கு நகர்ந்து, இந்த உலகமே போற்றும் விஞ்ஞானியாக மாறி வரலாறு படைத்துள்ளார். அவர் சோதனைகளை வெறும் சோதனையாக மட்டும்தான் பார்த்தாரே தவிர, அதனால் மன தளரவும் இல்லை, அவற்றை தனது முன்னேற்றத்திற்கு தடையாக, பாரமாக பார்க்கவும் இல்லை.

சோதனை என்றால் என்ன? என்பதனை முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும்.

சோதனை என்பது நம்மை நாமே மதிப்பீடு செய்து கொள்வதற்கான வாய்ப்பு.

ஆம், சோதனையின் போதுதான் ஒரு மனிதன் அதனை சமாளிப்பதற்கு சக்தி பெறுகின்றானா? அல்லது துவண்டு விடுகின்றானா? என்பதை அறிந்து கொள்ள முடியும்.

அவ்வாறுதான் நம் வாழ்வில் ஏற்படும் சோதனைகளும். அதில் ஏற்படும் இடையூறுகளையும், பிரச்சினைகளையும் தகர்த்துக்கொண்டு முன்னேறும் வாய்ப்பாக அவற்றைப் பயன்படுத்த வேண்டும்.

பெரும்பெரும் வேலைகளை எல்லாம் செய்ய வேண்டும். ஆனால், அதில் எந்தவொரு கஷ்டமும் இருக்கக்கூடாது என்றால், அது உழைப்பின்றி ஊதியம் பெற முயற்சிப்பதைப் போன்றாகும்.

திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது: “மனிதனுக்கு தான் முயற்சி செய்ததை தவிர வேறெதுவும் இல்லை” (53:39)

அவ்வாறென்றால், ஒவ்வொரு மனிதனும் உறுதிபட மனதில் நிலைநிறுத்த வேண்டிய விஷயம் என்ன?

‘நமது செயலுக்கான பலன் இன்னொரு மனிதனுக்கு கிடைக்காது. நான் எதனைச் சிரமம் எடுத்துச் செய்கின்றேனோ அதன் பலனும் எனக்குத்தான், சிரமம் எடுக்காமல் செய்கின்றேனோ அதற்கான விளைவும் எனக்குத்தான்’.

நிலைகுலையாமையுடன் இரு

உலக விவகாரங்களில் ஈடுபடும்போது மட்டும்தான் சோதனைகள் வரும் என்பதில்லை. மாறாக இறை உவப்பையும், மறுமை வெற்றியையும் பெற்றுத்தரக்கூடிய இறைப்பணியை செய்யும் போதும் சோதனைகள் மலைபோல் குவியும்.

ஏனென்றால், ‘நிலைகுலையாமையுடன் இறைப்பணியைத் தொடர்ந்து செய்கிறோமா; அல்லது நிராசையடைந்து அதனை விட்டு விடுகிறோமா?’ என்பதை இறைவன் சோதிப்பான்.

இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் தொடங்கி நபித்தோழர்கள், இமாம்கள், பெரும் பெரும் ஆளுமைகள் அனைவரும் சோதனைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். அதேவேளை அவற்றைக்கண்டு அவர்கள் அஞ்சவுமில்லை, தங்களது இறைப்பணியிலிருந்து சிறிதளவேனும் தடம் புரளவுமில்லை.

ஓர் இறைநம்பிக்கையாளனுக்கும். இறைநம்பிக்கை அற்றவனுக்குமான வேறுபாடு இங்குதான் வெளிப்படும்.

‘எனது இறைவன் என்னைச் சோதிக்கின்றான். எனது பொறுமையை பரிசோதிக்கின்றான்’ என்று எண்ணி ஓர் இறைநம்பிக்கையாளன் அனைத்தையும் சகித்துக்கொள்வான்.

அதேசமயம் நம்பிக்கையில்லாதவன் அரற்றுவான், அலறுவான். பின்னர் நமக்கெதுக்கு வம்பு என்று செய்துகொண்டிருந்த நல்ல செயல்களை விட்டுவிடுவான்.

நபி (ஸல்) அவர்கள் மக்காவில் இறைப்பணியைச் செய்து வந்த நேரத்தில் மக்காவாசிகள் பெரும்பாலானோர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதுமட்டுமல்ல தாக்குதலையும் மேற்கொண்டனர்.

அவை அனைத்தையும் பெருமானார் (ஸல்) அவர்கள் பொறுத்துக்கொண்டார்கள். பின்னர் தாயிப் நகரில் இறைச்செய்தியை எடுத்துச்சொல்லும் போதும்கூட. கல்லாலும், கடும் சொல்லாலும் பெருமானாருக்கு பெரும் சோதனைகளைக் கொடுத்தனர்.

எந்தளவிற்கு பெருமானார் (ஸல்) அவர்கள் தாக்கப்பட்டார்கள் என்றால்... உடலில் இருந்து வழிந்தோடிய ரத்தம் உறைந்து காலோடு காலாக ஒட்டிக்கொண்டது. நபியவர்களின் செருப்பை காலை விட்டும் கழற்ற முடியவில்லை.

அப்போதும் கூட நபி (ஸல்) அவர்கள், ‘போதும்... இவ்வளவு துயரங்களைத் தாண்டி இந்த அழைப்புப்பணி செய்ய வேண்டுமா?’ என்று நினைக்கவில்லை. மாறாக, தாயிபிலிருந்து திரும்பி வரும் சமயத்தில் கூட ஒரு மனிதரை சத்திய மார்க்கத்தை ஏற்கச்செய்தார்கள் என்று சொன்னால் எந்த அளவிற்கு இறைப்பணியில் நிலைகுலையாமல் இருந்திருப்பார்கள்.

முஹம்மத் (ஸல்) அவர்களின் வாழ்வு முழுக்க முழுக்க சோதனைகளாகவே நிறைந்திருந்தது. பெருமானார் (ஸல்) தமக்கு வந்த சோதனைகள் அனைத்திலும் நிலை குலையாமல் நின்றார்கள், வெற்றி பெற்றார்கள். இன்று உலகம் முழுக்க இஸ்லாமிய செய்திகள் பேசப்படுகிறது.

அதேபோலத்தான் நபித்தோழர்கள் வாழ்விலும் சோதனைகள் வந்திருக்கின்றன. பெருமானார் (ஸல்) மரணமடைந்த பிறகு மக்களில் பெரும்பாலானோர் இஸ்லாத்தை விட்டும் வெளியேறினார்கள். ஜகாத் கொடுக்க மாட்டோம் என்றார்கள்.

அப்போது கலிபாவாக பொறுப்பில் இருந்தவர் அபூபக்கர் (ரலி) அவர்கள் தான்.

அபூபக்கர் (ரலி) அவர்களிடம் அரபுகள் சொன்னார்கள்: “அபூபக்கரே, வீட்டை விட்டு வெளியே வராதீர்கள். மரணம் வரை நீங்கள் உங்களுடைய வீட்டிலேயே இறைவனை வணங்குங்கள்”.

இவ்வளவும் நடந்த பின்னரும், அபூபக்கர் (ரலி) அவர்கள் மனம் தளரவில்லை. அந்த சோதனைகளை எல்லாம் தகர்த்தெறிந்து சிறந்த இஸ்லாமிய ஆட்சியை தந்தார்கள். காரணம், பொறுப்பின் மீது கொண்ட கடமை உணர்வு.

எனவே, நாமும் சோதனைகளின்போது துவண்டு போகாமல், நிலை குலையாமல் நின்று வெற்றிகளை தட்டிச் செல்லக் கூடியவர்களாக மாறுவதற்கு வல்ல இறைவன் அருள்பாலிப்பானாக, ஆமீன்.

எஸ். முகமது அலி, அஸ்ஸலாம் இஸ்லாமியக் கல்லூரி, திருச்சி.
Tags:    

Similar News