உள்ளூர் செய்திகள்
மழை

கோத்தகிரியில் திடீர் மழை- கடும் குளிரால் மக்கள் அவதி

Published On 2022-01-17 04:36 GMT   |   Update On 2022-01-17 04:36 GMT
கோத்தகிரியில் தொடர்ந்து காலையிலும் மழை பெய்து வருவதால் தேயிலை தோட்டங்களுக்கு வேலைக்கு செல்வோர், அதிகாலையில் வேலைக்கு செல்லக் கூடியவர்கள் மிகவும் சிரமம் அடைந்தனர்.
கோத்தகிரி:

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களாக பகல் நேரங்களில் கடுமையான வெயிலும், இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் குளிரும் நிலவி வருகிறது. இதுதவிர காலையில் குளிருடன் உறைபனியும் வாட்டி வதைப்பதால் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர்.

கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று பகல் முழுவதும் கடும் வெயில் அடித்தது. மாலை நேரத்திற்கு பிறகு இதமான காற்றுடன் சாரல் மழை பெய்ய தொடங்கியது.

இரவு 10 மணியளவில் கோத்தகிரி, கீழ் கோத்தகிரி, கோத்தகிரி பஜார் பகுதி, கிராமப்புற பகுதிகள், கொடநாடு, சோலூர்மட்டம் உள்பட சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்தது. லேசான தூரலாக தொடங்கி பலத்த மழையாக கொட்டி தீர்த்தது.

இரவில் தொடங்கிய மழை விடிய விடிய பெய்தது. இன்று காலையும் கோத்தகிரி பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இந்த மழை காரணமாக கோத்தகிரி- குன்னூர் சாலை, கோத்தகிரி- மேட்டுப்பாளையம் சாலை, பஸ் நிலைய பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. ஊரடங்கு என்பதால் இரவில் வாகன போக்குவரத்து இல்லை. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படவில்லை. தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது.

தொடர்ந்து காலையிலும் மழை பெய்து வருவதால் தேயிலை தோட்டங்களுக்கு வேலைக்கு செல்வோர், அதிகாலையில் வேலைக்கு செல்லக் கூடியவர்கள் மிகவும் சிரமம் அடைந்தனர்.

மழைக்கு நடுவே உறைபனி மற்றும் குளிரின் தாக்கமும் அதிகமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி உள்ளனர். குளிரில் இருந்து காத்துகொள்ள தீ மூட்டி குளிர் காய்ந்து வருகிறார்கள்.

தொடர் உறைபனியின் தாக்கத்தால் தேயிலை செடிகளில் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News