செய்திகள்
பிரதமர் மோடி மற்றும் ப.சிதம்பரம்

இந்திய பொருளாதாரம் இன்னும் மோசமடையும் - ப.சிதம்பரம்

Published On 2019-11-30 11:12 GMT   |   Update On 2019-11-30 11:12 GMT
இந்திய பொருளாதாரம் அடுத்த காலாண்டில் இன்னும் மோசமடையும் என முன்னாள் நிதிமந்திரி ப.சிதம்பரம் தனது டுவிட்டர் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

மத்திய முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் ஐ.என்.எஸ். மீடியா முறைகேடு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் சிறையில் இருந்தபோதும் குடும்பத்தினர் உதவியுடன் தனது டுவிட்டர் பக்கத்தில் அவ்வப்போது கருத்துக்களை பதிவிட்டுவருகிறார். 

இதற்கிடையில், ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான நடப்பு நிதியாண்டுக்கான இரண்டாம் காலாண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கான கணக்கெடுப்பு முடிவுகள் நேற்று மாலை வெளியிடப்பட்டது. 

அந்த புள்ளிவிவரங்களின் அடிப்படையில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 4.5 சதவீகிதம் என்ற அளவில் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. பொருளாதாரம் சந்தித்துள்ள இந்த சரிவு கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய வீழ்ச்சியாக கருதப்படுகிறது. 



இந்நிலையில், இந்திய பொருளாதாரம் இன்னும் மோசமான நிலைக்கு செல்லும் என முன்னாள் நிதிமந்திரி  ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ள பதிவில், 'பெரும்பாலானவர்கள் கணித்ததன் படி, இரண்டாவது காலாண்டுக்கான நாட்டின் பொருளாதார வளர்ச்சி 4.5 சதவீகிதம் என்ற நிலையில் உள்ளது. ஆனால் பாஜக அரசு அனைத்தும் சரியாகத்தான் உள்ளது என தெரிவித்துவருகிறது. மூன்றாம் காலாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி 4.5 சதவீகிதத்துக்கு அதிகமாக செல்லாது. 

இதனால் தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு என மக்களின் வாழ்வாதாரம் இன்னும் மோசமடையும்’ என தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News