செய்திகள்
கலெக்டர் பிரசாந்த் வடநேரே

குமரி மாவட்டத்தில் திருமண மண்டபங்கள் அடுத்த அறிவிப்பு வரும் வரை மூடப்படும்- கலெக்டர் தகவல்

Published On 2020-03-23 11:56 GMT   |   Update On 2020-03-23 11:56 GMT
குமரி மாவட்டத்தில் திருமண மண்டபங்கள் அடுத்த அறிவிப்பு வரும் வரை மூடப்படும் என்று கலெக்டர் பிரசாந்த் வடநேரே தெரிவித்துள்ளார்.
நாகர்கோவில்:

குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

குமரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மாவட்டத்தில் உள்ள அனைத்து உணவு விடுதிகளிலும் பொதுமக்கள் அமர்ந்து சாப்பிடக்கூடாது. உணவுகளை பார்சல் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்பட வேண்டும். திருமண மண்டபங்கள், சமுதாய நலக்கூடங்கள் அனைத்தும் அடுத்த அறிவிப்பு வரும்வரை மூடப்பட வேண்டும்.

திருமணங்கள், விழாக்கள் எதுவும் முன்பதிவு செய்யக்கூடாது. மண்டபங்களில் முன்பதிவு செய்யப்பட்ட திருமண விழாக்களை ரத்து செய்ய வேண்டும். கோவில்களில் வழங்கப்படும் அன்னதானம் தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும்.

அனைத்து இ-சேவை மையங்களும் வருகிற 31-ந் தேதி வரை செயல்படாது. அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க வசதியாக சிறு, சிறு காய்கறிக்கடைகள், பழக்கடைகள், மருந்தகங்கள் மற்றும் பலசரக்குகடைகள் செயல்படலாம். பெரும் வணிக வளாகங்கள், நகைக்கடைகளை வருகிற 31-ந்தேதி வரை திறக்க கூடாது. பொதுமக்கள் ரொக்க பணபரிவர்த்தனையை தவிர்க்க வேண்டும். தற்போது குமரி மாவட்டத்தில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை.

இவ்வாறு கலெக்டர் பிரசாந்த் வடநேரே தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News