ஆன்மிகம்
பெண் பக்தர் ஒருவருக்கு சிவாச்சாரியார் காப்பு கட்டிய போது எடுத்த படம்.

மருதமலை முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது

Published On 2020-11-16 04:10 GMT   |   Update On 2020-11-16 04:10 GMT
மருதமலை முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. கந்த சஷ்டி விரதம் இருக்கும் பக்தர்கள் முருகப் பெருமானை வேண்டி சிவாச்சாரியர்களிடம் காப்பு கட்டிக்கொண்டனர்.
தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோவில்களில் கந்த சஷ்டி விழா நேற்று தொடங்கியது. இதில் கோவையை அடுத்த மருதமலையில் பக்தர்களால் 7-வது படைவீடு என்று போற்றப்படும் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு நாள்தோறும் வெளியூர் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு நேற்று அதிகாலை 5 மணிக்கு கோ பூஜை நடைபெற்றது. பின்னர் கோவில் நடை திறக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து பால், பன்னீர், மஞ்சள், ஜவ்வாது, சந்தனம் போன்ற 16 வகையான திரவியங்களால் சுவாமிக்கு அபிஷேகம் செய்யப் பட்டது. பின்னர் சிறப்பு தோற்றத்தில் முருகப் பெருமான் பக்தர்களுக்கு காட்சி அளித்தார் காலை 6 மணிக்கு உச்சிகால பூஜை, 9 மணிக்கு விநாயகர் பூஜை, புண்யாக விழா நடைபெற இறை அனுமதி பெறுதல், மண் எடுத்தல், முளைப்பாலிகை இடுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடை பெற்றன.

இதையடுத்து கருவறையை அடுத்த அர்த்த மண்டபத்தில் சுவாமி வள்ளி- தெய்வானையுடன் எழுந்தருளினார். காலை 9 மணிக்கு சுப்ரமணியசுவாமிக்கும் மற்றும் பிற தெய்வங்களுக்கும் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் அர்த்த மண்டபத்தில் யாகசாலை பூஜை தொடங்கியது. கந்த சஷ்டி விரதம் இருக்கும் பக்தர்கள் முருகப் பெருமானை வேண்டி சிவாச்சாரியர்களிடம் காப்பு கட்டிக்கொண்டனர். மதியம் 2 மணிக்கு உச்சிகால பூஜை நடைபெற்றது.

நேற்று விடுமுறை தினம் என்பதால் பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் வந்திருந்தனர். அவர்கள், தங்களின் குடும்பத்தினருடன் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் வருகையால் அடிவாரத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கந்தசஷ்டி திருவிழாவையொட்டி வருகிற 20-ந் தேதி வரை தினமும் காலையிலும், மாலையிலும் அர்த்த மண்டபத்தில் யாகசாலை பூஜை, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெறுகிறது.

20-ந் தேதி அதிகாலை மூலவருக்கு சண்முகார்ச்சனை, காலை 9 மணிக்கு சத்ருசம்கார வேள்வி, பகல் 12 மணிக்கு உற்சவருக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடைபெறுகிறது. மதியம் 3 மணிக்கு சூரபத்மனை வதம் செய்ய அன்னை பராசக்தியிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சி, வீர நடன நிகழ்ச்சியை தொடர்ந்து சம்ஹாரத்திற்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது.

அப்போது பானுகோபன், சிங்கமுகன் ஆகிய அசுரர்களை வதம் செய்ததை தொடர்ந்து சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹார விழா நடைபெறுகிறது. இதையடுத்து வெற்றி வாகை சூடுதல், சேவல்கொடி சாட்டுதல் ஆகிய நிகழ்ச்சி நடைபெறுகிறது. அன்று மாலை முருகனுக்கு கோபம் தணிக்கும் விதமாக மகா அபிஷேகம் நடைபெறுகிறது. 21-ந் தேதி காலை திருக்கல்யாண மண்டபத்தில் முருகன் வள்ளி தெய்வயானைக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து வேள்வி பூஜை, தாரை வார்த்தல் மற்றும் காலை 10 மணிக்கு முருகன் வள்ளி - தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது இதையடுத்து சுப்பிரமணிய சாமி வள்ளி-தெய்வானையுடன் பல்லக்கில் திருவீதி உலா வருகிறார். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News