செய்திகள்
டாஸ்மாக் கடைகளில் மதுவிற்பனை

கடலூர் மாவட்டத்தில் 2 நாட்களில் ரூ.11 கோடிக்கு மதுவிற்பனை

Published On 2021-04-30 04:11 GMT   |   Update On 2021-04-30 04:11 GMT
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள மதுபிரியர்கள் கடலூர் மாவட்ட எல்லை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் குவிந்து வருகின்றனர்.
கடலூர்:

கடலூர் மாவட்ட எல்லையோரம் அமைந்துள்ள புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்க அந்த மாநிலத்தில் ஊரடங்கு போடப்பட்டுள்ளது. இதுதவிர பல்வேறு புதிய கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் கடந்த 26-ந்தேதி இரவுக்கு மேல் 30-ந்தேதி வரை மதுக்கடைகள், பார்கள், சாராயம் மற்றும் கள்ளுக்கடைகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து புதுச்சேரியில் உள்ள மதுக்கடைகள், பார்கள், சாராயம் மற்றும் கள்ளுக்கடைகள் உடனடியாக மூடப்பட்டன.

தற்போது, இந்த உத்தரவு வருகிற 3-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் மதுபான கடைகள் மதியம் 12 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்பட்டு வருகிறது.

இதனால் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள மதுபிரியர்கள் கடலூர் மாவட்ட எல்லை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் குவிந்து வருகின்றனர். அவர்கள் தங்களுக்கு பிடித்த மதுபாட்டில்களை வாங்கிச் செல்கின்றனர்.

கடலூர் முதுநகர் அருகே உள்ள குடிகாடு பகுதியில் டாஸ்மாக் மொத்த குடோன் உள்ளது. இங்கிருந்து லாரிகள் மூலம் கடலூர் மாவட்டத்தில் உள்ள, 144 சில்லரை மதுபான கடைகளுக்கும் மதுபாட்டில்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன.

சராசரியாக கடலூர் மாவட்டத்தில் நாளொன்றுக்கு ரூ.2½ கோடி முதல் 3 கோடி வரை மதுபானங்கள் விற்பனை ஆவது வழக்கம். தற்போது அண்டை மாநிலமான புதுச்சேரியில் உள்ள மது பிரியர்களும் கடலூர் மாவட்ட டாஸ்மாக் கடைகளில் குவிந்து மதுபாட்டில்களை வாங்கிச் செல்வதால் விற்பனை கணிசமான அளவுக்கு உயர்ந்துள்ளது.

அதன்படி புதுச்சேரியில் மதுக்கடைகள் மூடப்பட்ட முதல் நாளான (27-ந்தேதி) அன்று கடலூர் மாவட்டத்தில் 5 கோடியே 70 லட்சம் ரூபாய்க்கும், 2-வது நாளான நேற்று முன்தினம் 5 கோடியே 35 லட்சம் ரூபாய்க்கும் மதுபாட்டில்கள் விற்பனையாகி உள்ளது.

கடந்த 2 நாட்களில் மட்டும் ரூ. 11 கோடியே 5 லட்சத்திற்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளது.
Tags:    

Similar News